Monday, March 7, 2011

சிவன் பேர் செப்பும் என் நா

(அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு.
1-5 சீர்களில் மோனை)

சுற்றும் வினைசெய் தீங்கை ஒற்றித் துடைக்கு முன்பார்வை
பெற்ற முவந்து தேரில் உலவும் பெம்மான்! காப்பாயே
பற்றென் றுன்னைப் பற்றின் பூந்தாள் பரிவாய்த் தந்தாள்வாய்
தெற்றென் றுணரும் அன்பில் உன்பேர் செப்பும் என்நாவே...1

புல்லைப் பூண்டைத் தருவைப் படைத்தப் புனித னுனைநாடி
இல்லைப் புகலென் றுன்தாள் துணையே என்போர்க் கபயமென்பாய்
சொல்லைக் கோத்த தமிழில் பக்திச் சுவைப்பாச் சரமேற்பாய்
ஒல்லை அருளும் தேவே! உன்பேர் உரைக்கும் என்நாவே...2

மெய்யில் அரவும் புலியின் அதளும் மிளிரும் அழகோடு
கையில் பலிதேர் கலனும் மழுவும் கனலும் விளங்கிடவும்
கொய்யும் மலரில் அலங்கல் புனைந்து குருவுன் பதம்போற்றித்
தெய்வத் திருவே மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே...3

ஊரும் உறவும் எதுவரை என்றே உழலும் மனமாற்றி
நேரும் வினையின் விளைவைத் தாங்கும் நிலையைத் தருவாயே
வேரும் கிளைக்கும் பூவும் கனியும் விதையாய் இருப்போனே
காரும் சிவனே மறவா துன்பேர் கழறும் என்நாவே!...4

சாரும் அடியார் உன்னைப் போற்றும் தமிழ்ப்பா விழைவாயே
சோரும் அன்பர் துயரைப் போக்கும் தூக்கும் மலர்தாளே
கோரும் எளியர் வறுமைப் பிணியைத் தீர்க்கும் மருந்தென்றே
சேரும் சிவனே மறவா துன்பேர் செப்பும் என்நாவே!...5

No comments: