Sunday, March 13, 2011

சிவன்பேர் செப்பும் என்நா!


ஆனே உவக்கும் ஊர்தி என்றே அமரும் ஆண்டவனே
தானே அன்பர் தம்மை ஆளாய்த் தாங்கும் பித்தனும்நீ
கூனே எழிலாம் பிறையைச் சடையில் கொள்ளும் முக்கணனே
கோனே சிவனே மறவா(து) உன்பேர் கூறும் என்நாவே....6.

நார்க்கும் வாசம் வருமே நறும்பூ நாரில் மாலையெனச்
சேர்க்கும் நிலைபோல் அடியர் கூட்டில் சீரார் பக்தியுண்டாம்
வார்க்கும் வனப்பில் திகழ ஆடும் மன்றில் சதங்கைபதம்
ஆர்க்கும் சிவனே மறவா(து) உன்பேர் அழைக்கும் என்நாவே....7

சீரும் சிறப்பும் வாழ்வும் பொருளும் இறைநீ என்றிருப்பேன்
சாரும் பிழையும் நீங்கச் செய்யும் தயையை உடையவனே
நீரும் வளியும் வானும் மண்ணும் நெருப்பும் எனுமைந்தாய்ச்
சேரும் சிவனே மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே....8

ஓடும் காலம் திரும்பா தென்றும் ஓர்ந்தே நம்பியுனை
நாடும் பக்தி நெறியில் செல்ல நாளும் பணிந்தேத்திச்
சூடும் நிலவும் நதியும் கவினாய்த் துலங்கு சடைசரிய
ஆடும் சிவனே மறவா(து) உன்பேர் அழைக்கும் என்நாவே.....9

கல்லும் துதிக்கும் மலராய்க் காணும் கருணை விழியோனே
ஒல்லும் வகையில் திருத்தாள் தனையே உன்னும் மனமருளே
கொல்லும் விடத்தை அமுதாய் உண்டாய் கோனே அறம்நடத்திச்
செல்லும் சிவனே மறவா(து)உன்பேர் செப்பும் என்நாவே....10

No comments: