Tuesday, March 29, 2011

அடைவார் வினை அறுமே

('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' - வாய்பாடு.
1-4 சீர்களில் மோனை)


மடமாகிய அறியாமையின் பிழையாவையும் மறைய
நடமாடிடு இறையோனினை வாலேயுளம் நயந்தும்
இடமேவிய உமையாளரன் துணைநாடிட இனிதே
அடைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....1.

பொழுதாகவும் நொடியாகவும் சுழன்றோடிடும் புவியில்
வழுவேமலி அவமாயையில் தடுமாறிட மலைந்து
விழுவேனெனை தடுத்தேயருள் செய்வாயென வேண்டி
அழுவார்வினை அறுமேஇனி இலையோர் பிறப் பவர்க்கே....2.

மணைமீதமர் இளையோன்மணம் தடுத்தாட்கொள வந்தே
பிணைநீஎன தடியானென அருளேசெயும் பெம்மான்
அணைமீறிடு அன்பாலுன தடியேபிடித் தழுதே
அணைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....3.

(சுந்தரரைத் தடுத்தாட்கொண்டது.)

மழைக்கேங்கிடும் பயிராகவுன் தயையேஉறு வரமாய்க்
கழைக்கூத்தெனும் புவிவாழ்விலுன் கழல்பாதமே கதியாய்ப்
பிழைக்கேப்பிறப் பெடுத்தேனுன தருளேபெரும் பேறென்
றழைப்பார்வினை அறுமேஇனி இலையோர்ப்பிறப் பவர்க்கே....4.

துளியேபிறை அணிவார்சடை யொளிர்பூஞ்சரம் இலங்கக்
கிளிதோளமர் வடிவாள்கயல் விழியாள்துணை அரனே
களியாய்நட மிடுவாய்சிவ பரனேஎனைக் காவென்(று)
அளிவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....5.

Thursday, March 24, 2011

வண்ணப் பாடல்!

(தனந் தனதன தந்த தனன தனத்தத் தனதனன)

நிதம் சதிரினில் விஞ்சை எழிலில் நடத்தைத் தருமிறைவன்
பதம் கதியென நெஞ்சில் அவனை நினைக்கத் துயரொழியும்
விதம் சதியினில் மிஞ்சும் வினையை அழித்துக் கருணைசெய
சதம் பதிகிற அன்பின் உருவன் இருக்கப் பயமிலையே!

Tuesday, March 15, 2011

வண்ணப் பாடல்!

'தன தனதந்த தத்தத் தனதன தானன தானதத்தா
'
இழை இசைகின்ற முத்துச் சுடரொளி மேவிய தோளசைத்தே
குழை யசைகின்ற நட்டத் தினிலிசை நாதமொ டாடலுற்றாய்
உழை யிசைகின்ற சக்திக் கனலுமை யாளவள் தேவுனக்கே
விழை விசைகின்ற சித்தத் தெளிவினை யேயருள் மாசறுத்தே.

இழை=ஆபரணம்,அணிகலன்.
உழை=பக்கம்.
குழை=காதணி.
விழைவு=நாட்டம்.

Sunday, March 13, 2011

சிவன்பேர் செப்பும் என்நா!


ஆனே உவக்கும் ஊர்தி என்றே அமரும் ஆண்டவனே
தானே அன்பர் தம்மை ஆளாய்த் தாங்கும் பித்தனும்நீ
கூனே எழிலாம் பிறையைச் சடையில் கொள்ளும் முக்கணனே
கோனே சிவனே மறவா(து) உன்பேர் கூறும் என்நாவே....6.

நார்க்கும் வாசம் வருமே நறும்பூ நாரில் மாலையெனச்
சேர்க்கும் நிலைபோல் அடியர் கூட்டில் சீரார் பக்தியுண்டாம்
வார்க்கும் வனப்பில் திகழ ஆடும் மன்றில் சதங்கைபதம்
ஆர்க்கும் சிவனே மறவா(து) உன்பேர் அழைக்கும் என்நாவே....7

சீரும் சிறப்பும் வாழ்வும் பொருளும் இறைநீ என்றிருப்பேன்
சாரும் பிழையும் நீங்கச் செய்யும் தயையை உடையவனே
நீரும் வளியும் வானும் மண்ணும் நெருப்பும் எனுமைந்தாய்ச்
சேரும் சிவனே மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே....8

ஓடும் காலம் திரும்பா தென்றும் ஓர்ந்தே நம்பியுனை
நாடும் பக்தி நெறியில் செல்ல நாளும் பணிந்தேத்திச்
சூடும் நிலவும் நதியும் கவினாய்த் துலங்கு சடைசரிய
ஆடும் சிவனே மறவா(து) உன்பேர் அழைக்கும் என்நாவே.....9

கல்லும் துதிக்கும் மலராய்க் காணும் கருணை விழியோனே
ஒல்லும் வகையில் திருத்தாள் தனையே உன்னும் மனமருளே
கொல்லும் விடத்தை அமுதாய் உண்டாய் கோனே அறம்நடத்திச்
செல்லும் சிவனே மறவா(து)உன்பேர் செப்பும் என்நாவே....10

Monday, March 7, 2011

சிவன் பேர் செப்பும் என் நா

(அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு.
1-5 சீர்களில் மோனை)

சுற்றும் வினைசெய் தீங்கை ஒற்றித் துடைக்கு முன்பார்வை
பெற்ற முவந்து தேரில் உலவும் பெம்மான்! காப்பாயே
பற்றென் றுன்னைப் பற்றின் பூந்தாள் பரிவாய்த் தந்தாள்வாய்
தெற்றென் றுணரும் அன்பில் உன்பேர் செப்பும் என்நாவே...1

புல்லைப் பூண்டைத் தருவைப் படைத்தப் புனித னுனைநாடி
இல்லைப் புகலென் றுன்தாள் துணையே என்போர்க் கபயமென்பாய்
சொல்லைக் கோத்த தமிழில் பக்திச் சுவைப்பாச் சரமேற்பாய்
ஒல்லை அருளும் தேவே! உன்பேர் உரைக்கும் என்நாவே...2

மெய்யில் அரவும் புலியின் அதளும் மிளிரும் அழகோடு
கையில் பலிதேர் கலனும் மழுவும் கனலும் விளங்கிடவும்
கொய்யும் மலரில் அலங்கல் புனைந்து குருவுன் பதம்போற்றித்
தெய்வத் திருவே மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே...3

ஊரும் உறவும் எதுவரை என்றே உழலும் மனமாற்றி
நேரும் வினையின் விளைவைத் தாங்கும் நிலையைத் தருவாயே
வேரும் கிளைக்கும் பூவும் கனியும் விதையாய் இருப்போனே
காரும் சிவனே மறவா துன்பேர் கழறும் என்நாவே!...4

சாரும் அடியார் உன்னைப் போற்றும் தமிழ்ப்பா விழைவாயே
சோரும் அன்பர் துயரைப் போக்கும் தூக்கும் மலர்தாளே
கோரும் எளியர் வறுமைப் பிணியைத் தீர்க்கும் மருந்தென்றே
சேரும் சிவனே மறவா துன்பேர் செப்பும் என்நாவே!...5

Sunday, March 6, 2011

வண்ணப் பாடல்!

தினமொன்று மாயத் தனமென்று நாடித்
...தெளிவின்றி வாழக் ..குறியாமல்
உனதன்பை மேவிப் புகலென்று கோடற்
...குறுகின்ற தாளைத் ..தருவாயே
எனதென்று கூறத் தயைகொண்டு நேயற்
...கெளிதென்ற பார்வைக் குரியோனே
தினமின்பு சேரத் தருகின்ற கோலத்
...திருநின்ற ஊரிற்.. பெருமானே!

வண்ணப் பாடல்!

(தனதந்த தானத் தனதந்த தானத்
...தனதந்த தானத் தனதான)

சிறையென்று வாழக் குறைகொண்டி டாமற்
...சிவமென்று நாடற்..கருள்வாயே
பறைகொண்ட நாதத் தொலிமண்டு கானிற்
...பதமொன்று காணத் ..தருவாயே
அறைகின்ற வேதத் துறைகின்ற தீயுற்
...றழலென்ற சோதிப்.. பொருளோனே
திறமண்டு நாமத் திறைஎன்ற கோலத்
...திருநின்ற ஊரிற்.. பெருமாளே!