Sunday, January 31, 2010

முறைசெயும் நம திறைவனே!

குறைபிறைஉறை விரிசடையொளிர் நறைமலர்ச்சரம் அணிபவன்
மறையறைகழல் தொழும்சிறுவனுக் கருளமறலி உதைத்தவன்!
கறைமிடறுடை நடமிடுசிவன் உறுநரினுளம் நிறைபவன்!
சிறைஉறுபவ வினையறும்படி முறைசெயும்நம திறைவனே!


சிறை=தளை
உறுநர்=அடியார்

Friday, January 29, 2010

சிலம்பொலிகழல் பணிவமே!

(கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளம்)

அலைகடலிலும் புலர்விடிவிலும் அலர்மலரிலும் உறைபவன்
கலைநிலவெழில் பொலிஅலைநதி துலங்கிடவருள் இறையவன்
நிலைகுலைவுற மயலிருள்வினை தொலைந்திடவரு கதிரவன்
சிலையழகுமை உளமிலங்குவன் சிலம்பொலிகழல் பணிவமே!


விடிவு= விடியல்

Saturday, January 23, 2010

மதிசூடி துதிபாடி! - 4



பூலா வனத்துப் பெருமானே!
-----------------------------

சுகமும் துயரும் இருவினையாய்த்
...தொடரும் பந்தத் தளைகளறத்
திகழும் உனது நிழல்தருமே
...செறிந்த பக்தி நெறிதனையே!
இகமும் பரமும் உனைநினைக்கும்
...இதமாம் பதமே அளித்தருள்வாய்!
புகழும் புகலும் தரும்பரமா!
...பூலா வனத்துப் பெருமானே!

சுதியில் இசைந்த இசைவடிவே!
...சுயம்பு லிங்கேஸ் வரஹரனே!
மதுவின் இனிப்பில் சுவைவருமோ?
...மதுரம் தருமுன் அஞ்செழுத்தே!
எதுவும் வசமுன் அருள்நிழலில்
...இகமாய்ப் பரமாய்த் திகழ்பவனே!
பொதுவில் நடனம் புரிந்தருளும்
...பூலா வனத்துப் பெருமானே!

மதிசூடி துதிபாடி! - 3

பூலா வனத்துப் பெருமானே!
-----------------------------

சிரத்தில் கங்கை மதியணிந்து
...திகழும் மார்பில் சரமிலங்க
கரத்தில் மழுமான் அழலுடனே
...கனகச் சபையில் நடமிடுவாய்!
வரத்தை அருளும் தயையுருவே!
...மனத்துள் நிறைவைத் தருநிதியே!
புரத்துள் உயிராய் விளங்கிடுவாய்!
...பூலா வனத்துப் பெருமானே!

(புரம்=உடல் என்ற பொருளில்.)

பாவாய்ப் பண்ணாய் அடியவரும்
...பணிந்து செய்தத் திருமறையை
நாவால் சொல்ல மனமுருகி
...நலமே அளிக்கும் எனதிறைவா!
காவாய் என்றே இறைஞ்சிடுமுன்
...கருணைக் கடலாய் அருள்தருவாய்!
பூவார் பொழில்சூழ் திருத்தலமாம்
...பூலாவனத்துப் பெருமானே!

மதிசூடி துதிபாடி! - 2

பூலா வனத்துப் பெருமானே!
--------------------------

கல்லார் கற்றார் எவரிடத்தும்
...கருணை பொழியும் அருநிதியே!
இல்லா இடமென் பதுமிலையே
...ஈசா! எங்கும் நிறைந்திருப்பாய்!
சொல்லாய் ஒலியாய்த் திகழுமுனைத்
...துதித்தே கேட்பேன் உனதடிக்கீழ்ப்
புல்லாய்ப் பிறக்கும் வரமருள்வாய்!
...பூலா வனத்துப் பெருமானே!

பித்தன் நீயென் றுரைத்தவரைப்
..பேணிக் காத்த திறம்சொலவோ?
சித்தம் நிறைவாய் உனதருளில்
...சித்தித் திருக்க அருளுவையோ?
கத்தும் குயில்கள் இசைபொழியும்
...கமழும் வண்ணப் பொழிலுனக்காய்ப்
புத்தம் புதுப்பூச் சொரிந்திலங்கும்
...பூலா வனத்துப் பெருமானே!

Sunday, January 17, 2010

மதிசூடி துதிபாடி! - 1

பூலா வனத்து பெருமானே!
-------------------------


ஆதி அந்தம் எதுவுமில்லை
...அரனே! அரவ மணிந்தவனே!
சோதி அழலாய் ஒளிர்பவனே!
...தூய அன்புக்(கு) உருகிடுவாய்
ஓதித் துதிக்கும் மறைகளுமே
...உன்னை முழுதாய் அறிந்ததில்லை!
பூதி யடைந்தோர் தனியிறைவா!
...பூலா வனத்துப் பெருமானே!

கண்ணின் மணியாய் ஒளிர்பவனாம்
...கனிவாய் அருளைத் தருபவனாம்
எண்ணித் துதிப்போர்ப் பரவசத்தில்
...இசைந்தே இருக்கும் இறைவனவன்!
மண்ணில் நிகழும் துயரனைத்தும்
...மாற்றி நலமே விளைவிக்கும்
புண்ணி யஞ்சூழ் மலர்க்கழலோன்
...பூலா வனத்துப் பெருமானே!

தெய்வத் தருவின் நிழலினிலே
...சிவனாய்த் தோன்றும் அருளுருவே!
வெய்ய வினையாம் பவமறுக்கும்
...விமலா உனையே தொழுதிடுவேன்!
ஐய! நின் தாள் அடியவரை
...அணைத்துக் காக்கும் அடைக்கலமாம்!
பொய்கை யுடன்பூம் பொழிலிலங்கும்
...பூலா வனத்துப் பெருமானே!

அன்னே! அழியா அருளமுதே!
...அன்பே சிவமாய்த் திகழுருவே!
மன்னே! மணியே! மயலழிக்கும்
...மறையே! பொருளே! புகலடைந்தேன்!
என்னே! உன்றன் எழில்நடனம்
...இறைவா! எண்ணிக் களித்திருப்பேன்!
பொன்னே! நிதியே! கவினிலங்கும்
...பூலா வனத்துப் பெருமானே!

Tuesday, January 12, 2010

ஏன்?

(நவம்பர்,2007,சந்தவசந்தக் கவியரங்கம்'ஏன்?'என்னும் தலைப்பில்
நான் எழுதியது)

'ஏன்'எனும் சொல்லில்தான் எத்தனை வீச்சுகள்!
தானதில் முன்நின்று தரும்ரசங்கள் எத்தனையோ!

பள்ளிகொண்ட பெருமானைப் பாடலிலே கவிராயர்
துள்ளிவரும் வெள்ளமெனத் தொடுத்தகவி ஏனில்தான்!

சுந்தராம்பாள் தேனிசையில் சுழன்றுவரும் என்ன என்ன?
கந்தனவன் ஆண்டியுரு கண்டுருகும் நிலையிலன்றோ?

ஏனென்ற கேள்விதனை இளமழலை கேட்கையிலே
தேனென்ற சுவை இனிக்கும் செவிநிறைக்கும் பரவசமாய்!

எதிர்பார்க்கும் ஆய்வுகளில் 'ஏன்'களால் வளர்ச்சியுறும்
எதிர்பாரா ஈகையியினில் 'ஏன்'களே உயர்வுபெறும்!

தத்துவ விசாரங்கள் சந்தேகம் எழுகின்ற
வித்துவ மேதமையில் விரிந்துயர்ந்த அறிவியலில்

சத்துவத் தவநெறியில் சழக்கிடும் வாதமதில்
நித்தியக் காட்சியினில் நெகிழ்மன சாட்சியினில்

கோபத்தின் வேகத்தில் குமுறுகின்ற துக்கத்தில்
தாபத்தில் தீர்க்கவொணாச் சதிபுரியும் விதியதனில்

இளமையின் நாதத்தில் எழுகின்ற கீதத்தில்
விளைகின்ற மனலயத்தில் தெறித்துவிழும் 'ஏன்'களே!

விளக்கிடும் இயற்கையில் விரைந்துசுழல் பருவங்களில்
உளத்தினில் எப்போதும் ஊடுருவும் 'ஏன்'தானே?

பயத்தினில் இயற்கையைப் பணிந்தவன் மனத்தில்'ஏன்'
வியந்திடப் புகுந்துடன் மிஞ்சிடவே சாதித்தான்!

இயற்கையின் நியதியில் இறைநீதிப் பேரிடரைச்
செயற்கரிய அறிவியலால் தவிர்க்கமுயல் சாதனங்கள்!

புதுமைக்கு மறுப்பில்லை புகுந்திருக்கும் உலகமயம்
எதுவரைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தெரியவில்லை!

நவயுகத்தில் வருகின்ற நாகரிக நடைமுறைகள்
தவபலமாம் பண்பாட்டை தாக்காமல் இருந்திடட்டும்!

Monday, January 11, 2010

செஞ்சடை ஈசா!

செஞ்சடை ஈசா! எந்தாய்!
சஞ்சல மாகிய பவமிகு தளையற உன்றன்
அஞ்சலெ னக்கரு ளென்றே
தஞ்சம தேயளி மலரிணை சாற்றிடு மனமே!

பவம் = பிறப்பு

Wednesday, January 6, 2010

சிவன் பூங்கழல் !


விதிவழி வலியது மருளாய்!
பதிசிவ னதுபூங் கழலடி பரவிடு மனமே!
நதிமதி யணிவார் சடையன்
சதிஉமை யொடுதரு நடமிது சததம் நிறைவே!

('கந்த பத்யம்'எனும் அமைப்பில் இப்பாடல் அமைந்தது. சிவசிவாவுக்கு நன்றி)