(எண்சீர் விருத்தம் - 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)
----------------------------------------------------------------------
ஆராத பேரின்ப அருளா .னானை
...அயன்மாலும் தொழுதேத்தும் அழலா.னானை
சீராரும் பிறைமேவும் சென்னி யானை
...செந்துவர்வாய்க் குமிண்சிரிப்பில் திகழ்கின் றானை
வாராத செல்வமென வருகின் றானை
...வாழ்வாக நினைத்தன்பர் வழுத்தும் கோனை
தீராத வினைதீர்க்கும் தெய்வ மானச்
....சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....1
நேயவனை நின்மலனை நிதியா .னானை
...நினைவினிலே எப்பொழுதும் நிற்கின் றானை
மேயவனை அன்பருளம் வீற்றான் தன்னை
...வெண்ணீற்றன் குளிரிமய வெற்பின் கோனை
தீயவினை செய்நோயைத் தீர்க்கின் றானை
...தேன் தமிழில் தேவாரம் செவியேற் பானை
சேயவனைத் தந்தருளும் தாயும் ஆன
...சிராப்பள்ளிச் சிவன் தன்னைச் சிந்தி நெஞ்சே!....2
நேயவன்=மிக்க அன்புடையவன்.
மேயவன்=விரும்பியவன்.