Sunday, December 25, 2011

திருக்காளத்தி!--4

மங்கை யாளுமை மன்னன் செஞ்சடை
கங்கை யானுறை காளத்தி
இங்கி தம்பெற எண்ணி ஏத்திட
எங்கு மேநிறை இன்பமே....7

நைய வேபலி நாடும் கப்பரை
கையி .னானுறை காளத்தி
மெய்யில் நீறினை மேவி ஏத்திட
மையல் செய்வினை மாயுமே....8

Monday, December 19, 2011

திருக்காளத்தி!--3

ஐய னேயெனின் அஞ்சல் தந்திடும்
கையி னானுறை காளத்தி
பைய வேஇசை பாடிப் போற்றுதல்
செய்ய வல்வினை தீருமே....5

நாட்ட மோடருள் நல்கி உய்வழி
காட்டு வானுறை காளத்தி
வேட்டு மின்னிசை மேவ ஏத்திட
வாட்டு மூழ்வினை மாயுமே....6

Friday, December 9, 2011

திருக்காளத்தி!-- 2

விண்ணு லாவெயில் மூன்றும் தீப்படு
கண்ணி னானுறை காளத்தி
நண்ணி நற்றமிழ் நாளும் போற்றிடத்
திண்ண மாய்வினை தீருமே....3

விண்+உலாவு+எயில்=விண்ணுலாவெயில்

விண்ணி லாதிகழ் வேணி சேர்மலர்க்
கண்ணி யானுறை காளத்தி
அண்ணு வாருறு அன்பில் போற்றிட
மண்ணி னார்வினை மாயுமே....4

அண்ணுதல்= நெருங்குதல்.

Wednesday, December 7, 2011

திருக்காளத்தி-- 1

'தான தானன தான தானன
தான தானன தானன
தான தானன தான தானன
தான தானன தானன'
- என்ற சந்தம்.
ஈற்றுச் சீரைத் தவிர மற்ற சீர்கள் எல்லாம் குறிலில் முடியும்.

பிச்ச னேயெனும் அன்புக் காட்படும்
அச்சன் மேவிய காளத்தி
மெச்சி யோதிடும் அன்ப ருக்கவன்
வைச்ச மாநிதி ஆவனே....1

சுட்ட நீறணி சோமன் கீளுடைக்
கட்டு வானுறை காளத்தி
நிட்டை யாய்த்தொழும் நெஞ்சி னார்த்துயர்
விட்டு மேனிலை மேவுமே....2

Monday, December 5, 2011

திருமழபாடி!-- 3

வண்ணவிருத்தம்
-----------------
"தனனா தனனா .. தனதான"
"வரதா மணிநீ ...... யெனவோரில்" - திருப்புகழ் - பழநி.

தழையோ மலரோ .. அடிதூவின்
....சதமே அடைவா .. ரருளேதான்
பிழையே செயலா .. யலைவோரும்
....விடையோ .னினைவா .. லுயர்வாரே
விழைவா யரனார் .. புகழோதி
....மிகவே அடியார் .. தொழுமீசன்
அழகார் பொழில்சூழ் .. மழபாடி
....அகலா துறை மா மணிதானே....5

இதமா கிடுமே .. சிவநாமம்
....இணையே இலையே .. இனிதேதான்
முதலா .னவனாய் .. முடிவானான்
....முனமா லடிசேர்.. குருவானான்
சதமா யவனே .. கதியாகும்
....சரணா யடைவா .. ருளமேவும்
அதளா டையினான் .. மழபாடி
....அகலா துறைமா மணிதானே....6

Sunday, December 4, 2011

நஞ்சங்கூடு கண்டனே!-- 5

ஓடி செல்வம் சேர்த்திடும்
....உள்ளம் அமைதி கொள்ளுமோ?
வாடி நோகும் வாழ்வினில்
....வரமா யினிக்கும் பேரதே
கூடி இசைந்து பத்தியால்
....கூத்த! உன் தாள் சரணென
நாடி னாருக் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....9

அவமே தருதீ வினையற
....அன்பர் நாடித் துதிசெய
தவமே உருவாய் அமர்ந்தவன்
....தயையாய் புகலை அளிப்பவன்
'புவனா தார நாதனே
....புனிதா பழமை யானவா
நவனே!' என்பார்க் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....10

Thursday, December 1, 2011

நஞ்சங்கூடு கண்டனே!-- 4

உச்சி மீது வெண்பிறை
....உரகம் கங்கை ஏற்றவா
பச்சை யம்மை யோர்புறம்
....பாங்காய்க் கொண்டு நின்றவா
மெச்சி யோதும் பாடலை
....விரும்பும் உன்னைச் சரணென
நச்சி னாருக் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....7

வியக்க வைக்கும் ஆடலில்
....விண்ணும் மண்ணும் இன்புறப்
பயக்கும் உன்றன் கருணையை
....பாடிப் பாடி அன்பொடு
தயக்கம் இன்றி உன்னடி
....சரணம் ஐயா என்றுமே
நயக்கும் அடியார்க் கருள்செயும்
....நஞ்சங் கூடு கண்டனே....8