Monday, September 12, 2011

புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)

அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' என்ற அரையடி வாய்பாடு.

நீர்க்கண் குமிழாம் வாழ்வுதனில்
...நிமலன் மலர்தாள் நற்றுணையாம்
தீர்க்கும் வினைசெய் துன்பினையே
...சிறந்த மருந்தென் றாகிடுவான்
பார்க்குள் கருணை வாரிதியாம்
...பரமன் வெம்மா தோலினையே
போர்க்கும் பெம்மான் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே....1

நோக்கும் பார்வை அருளாகி
...நோய்செய் வினையைத் தீர்த்திடுமே
தீக்குள் வெம்மை ஆகிடுவான்
...தீயின் ஒளியாய் ஒளிர்கின்றான்
காக்கும் ஐயன் தாளிணையைக்
...கருதும் அடியார் துன்பினையே
போக்கும் பரமன் அமர்கோவில்
...புள்ளி ருக்கு வேளூரே.. ..2

7 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மரபுக் கவிதைகள் அருகிவிட்டன. உங்களுக்கு அருமையாக வருகிறது.
ஒரு சந்தேகம். புள்ளிருக்கும் வேளூர் என்பதா? புள்ளிருக்கு வேளூரா?

Thangamani said...

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்கநன்றி!

புள்ளிருக்கு வேளூர் என்பது சரி.
புள்(சடாயு),இருக்கு(ருக்வேதம்),வேள்(முருகன்),ஊர்(சூரியன்).

sury siva said...

http://youtu.be/d2d81pvtlH4
வைதீஸ்வரன் கோவில் எங்களது குல தெய்வமாம்.
எங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அங்கே ஒரு வயது
முடிந்தபின் முடியிறக்கி வைதீஸ்வரனையும் தைலாம்பிகை அம்மனையும்
வழிபடுவது எங்கள் வழக்கம்.

தங்கள் பாடல் மிகச் சிறப்புடைத்து.
அதனை நான் அடாணா ராகத்தில் பாட யத்தனித்திருக்கிறேன்.
இங்கே கேட்கவும்/பார்க்கவும்.
http://youtu.be/d2d81pvtlH4
சுப்பு ரத்தினம்.

Thangamani said...

திரு.சூரி அவர்களுக்கு,
நீங்கள் அடாணா ராகத்தில் மிக அழகாய்ப்
பாடியதைக்கேட்டேன் மகிழ்ந்தேன்.
விக்ரஹங்களின் அலங்காரப் படங்களும்
கண்களுக்கு நிறைவைத் தருகின்றன!
உங்களுக்கு மிக்க நன்றி.

ஒன்று சொல்லியே ஆகவேண்டும்.
உங்களின் கவிதாசக்தி 'விஸ்வரூபம்'ஆகத்தெரிகிறது!
சந்தவசந்தக் குழுமத்தில்
உங்கள் கவிதைகளைப் படித்து வியந்துள்ளேன்.
பாராட்டுகள்!வாழ்த்துகள்!

Geetha Sambasivam said...

பரமன் வெம்மா தோலினையே
போர்க்கும் பெம்மான் அமர்கோவில் //

இது கொஞ்சம் புரியலையே??


.

Thangamani said...

புள்ளிருக்கும் வேளூரில் எழுதவேண்டிய பதிலை
திருவிற்கோலத்தில் எழுதிவிட்டேன்.
(வயசானதால் மறதிமட்டும் வளர்ந்துண்டே இருக்கு!)
பொறுத்துக்கொள்ளுங்கள் கீதா!

Geetha Sambasivam said...

அம்மா, நான் புரிந்து கொண்டேன். மறதி எல்லா வயதினருக்கும் உரியது தானே