Wednesday, July 3, 2013

திருநெடுங்களம்-- 4

தணிமிகு பனிமலைத் தலைவனே உமையாள்
...தனையொரு கூறுடை தாண்டவா தீராப்
பிணியெனும் முன்வினைப் பீழையை நீக்கி
...பீடுற வாழ்ந்திடும் பெற்றியை கேட்டேன்
பணியென உன்புகழ் பாடியே நாளும்
...பைங்கழல் தொழுதிடும் பத்தருக் கென்றும்
அணியனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்கத் தரனே....7

தணி=குளிர்ச்சி.  பீழை=துன்பம்.

உமையலால் துணையென ஒருவரும் இல்லை
...உமதிணை கழலினை உன்னினேன் ஐயா
இமையதாய்க் காத்தருள் என்றுமை வேண்டி
...இணையிலா உம்புகழ் ஏற்றிடு வேனின்
சுமையதாம் ஊழதன் துன்பினைச் சின்னத்
...தூசென ஊதிடும் துய்யனே நஞ்சுண்
அமுதனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....8

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புகழ் பாடும் வரிகள் மனதை கவர்ந்தது... வாழ்த்துக்கள் அம்மா...

Thangamani said...

மிக்கநன்றி தனபாலன்.