Friday, July 26, 2013

திருவாஞ்சியம்--2

மன்னிய மாமணியாய் மறை ஓதிடும் தெய்வமவன்
கன்னலின் வில்லுடையான் தனை தீயெழச் செற்றவனை
உன்னிட அன்பூறும் உயர் பேருடை வித்தகனூர்
தென்னைகள் ஆர்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....6

 ஓங்கழ லாயுயர்ந்தே  ஒளிர் மாமலை ஆனவனின்
பூங்கழல்  நாடியவன் புகழ் பாடிடு வார்க்கருள்வான்
தேங்கிடு மன்பினிலே திகழ் முக்கணன் மேவிடுமூர்
தீங்கனி ஆர்பொழில்சூழ்  திரு வாஞ்சிய நன்னகரே....7

என்றுனை கண்டிடுவேன் எனும் நந்தனின் ஏக்கமற
அன்றருள் செய்தபரன் அடி போற்றிடும் அன்பரையே
நன்றுசெய் தாட்கொளும்பாய் நதி சூடிய ஈசனினூர்
தென்றிசைக் கோன்பணியும் திரு வாஞ்சிய நன்னகரே....8

கூன்பிறை சூடியவன் குழை ஆடிட ஆடிடுவான்
தான் தனி  யானவனாம் தவ மேசெயும்  செஞ்சடையன்
மான்கர மேந்தியவன் மறை ஓதிடும் சங்கரனூர்
தேன்மலர் ஆர்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....9


ஒவ்வுதல் தானிலையென் றுயர் சோதியாய் நின்றவனை
பவ்விய மாயடியார் பர விப்பணி பூரணணாம்
நவ்விகை ஏந்துவானூர் நறை மாமலர்ச் சோலைகளில்
செவ்வழி தேன்முரலும் திரு வாஞ்சிய நன்னகரே....10
ஓவ்வுதல்=ஒப்புதல்
நறை=நறுமணம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா... வாழ்த்துக்கள்...

Thangamani said...

உங்கள் வரவுக்கும்,கருத்துக்கும்
மிக்கநன்றி,தனபால்.