Wednesday, July 17, 2013

திருவாஞ்சியம்--- 1

 திருவாஞ்சியம் 
 --------------------
(
தானன தானதனா தன தானன தானதனா)

ஆலமர் செல்வனவன் அரு மாமறை ஓதியவன்
காலனைக் காய்ந்துதைத்த கழ லன்மத யானையதன்
தோலுடைப் போர்த்தியவன் அருள் செய்பதி ஆவதுதான்
சேலுகள் வாவிகள்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....1

தாணுவென் றேதிகழ்வான் தழ லாடிடும் ஈசனவன்
காணுதற் கேயரிதாம் கழல் நாடிடு வோர்த்துணைவன்
பூணுவன் பாம்பணியாய் புரி வார்சடை யோனுறையூர்
சேணுயர் சோலைகள்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....2

 திங்களை ஏந்துசடை திகழ் செம்மையி லேஒளிர்வான்
சங்கடம் தீர்த்திடுவான் சகம் காத்திடும் உமைபங்கன்
அங்கணன் நீலகண்டன் அடி யாருளம் மேயவனூர்
செங்கயல் பாய்புனல்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....3

ஆரணி செஞ்சடையான் அடல் ஏற்றினில் ஊர்ந்திடுவான்
வாரணி நன்மலர்சேர் வழி பாட்டினி லேமகிழ்வான்
பூரணி பங்குடையான் பொடி பூசிய மெய்யனினூர்
சீரடி யார்திரளும் திரு வாஞ்சிய நன்னகரே....4

ஐய னருள்விரும்பும் அடி யார்மனக் கோவிலுளான்
நைய வரும்வினையை நலிந் தோடிடச் செய்திடுவான்
வைய மெலாம்புரக்கும் மதி சூடிடு வானிடமாம்
செய்யில் கொக்கிரைதேர் திரு வாஞ்சிய நன்னகரே....5

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை அம்மா... உங்களின் திறமைக்கு வாழ்த்துக்கள்... நன்றி...

Thangamani said...

பாடலைப் படித்துப் பாராட்டியதற்கு
மிக்கநன்றி தனபாலன்.

இளமதி said...

அம்மா வணக்கம்!
இன்று உங்களை வலச்சரத்தில் அறிமுகஞ் செய்திருக்கக் கண்டு வந்தேன்.

அருமையாக இருக்கிறது அத்தனையும் இங்கு.

தொடர்கிறேன்....

வாழ்த்துக்கள்!

அருணா செல்வம் said...

வணக்கம் அம்மா.

அருமையாய்ப் பாடலைச் சமைக்கிறீர்கள்.
வணங்குகிறேன்.

Thangamani said...

வருக!
இளமதி உங்கள் பாராட்டுக்கு மிக்கநன்றி.

Thangamani said...

வருக!
அருணா செல்வம், உங்கள் பாராட்டுக்கு மிக்கநன்றி.

Thangamani said...

வருக!
குமார், உங்கள் பாராட்டுக்கு மிக்கநன்றி.
வலைச்சரத்தைப் பார்த்து மகிழ்ந்தேன்.அம்பாளடியாள்
அவர்களின் பணி சிறந்தது.பதிவர்களுக்கும்,அம்பாளுக்கும்
என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.