Thursday, February 21, 2013

திருவதிகை வீரட்டானம்--- 1

  (அறுசீர் விருத்தம் - 'காய் காய் காய் காய் மா தேமா' என்ற வாய்பாடு.
1-5
சீர்களில் மோனை.)

சிவநெறிசேர்ந் துய்யவெண்ணும் தமக்கைமனம் மகிழவந்த செம்மல் செய்யும்
கவலைதரு வினையகலும் செந்தமிழ்த்தேன் பாவலங்கல் கனிவாய் ஏற்கும்
உவகையினில் அருள்பொழியும் தெய்வமவன் திருநடம்செய் ஒண்தாள் போற்றி
சிவனுறையும் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே....1

அல்லெனவும் பகலெனவும் பாராது திலகவதி அரனை வேண்ட
நல்வழியை நாவரசர்க்  கருள்செய்து ஆட்கொண்ட நம்பன் மன்றில்
பல்லியமும் முழங்கிடவே ஆடல்செய்வான் கழல்பணியும் பத்தர்க் கன்பன்
செல்வனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீருமன்றே....2

அம்மையுடன் ஆடிடுவான் கழல்பற்றித் தமக்கையிறை அருளை வேண்ட
நம்மையனும் இளவலுக்கு  சூலைதந்தாட் கொண்டவர்க்கு நன்று செய்ய
மம்மரறு பாவலங்கல் சூட்டிமகிழ் வாகீசர் வணங்கும் தேசார்
செம்மலுறு திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே....3

 பேரவனுக்(கு) ஆயிரமாய்க் கொண்டிலங்கும் பிறைசூடிப் பெம்மான் செய்யச்
சீரடியை போற்றிமகிழ் நாவரசர் தேவாரப் பண்ணிசையை செவியேற் கின்ற
பூரணன் தன் நுதல்விழியால் முப்புரத்தை எரியாக்கிப் பொடி செய்த
தீரனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே....4

சேவமரும் அங்கணன் தன் அடியாரைக் காத்திடவே தேடி வந்து  
நோவவரும் வினைதீர்ப்பான் முப்புரத்தை எரிசெய்யும் நுதல்கண் ணன்
பாவடியில் நிறைந்திருக்கும் ஈசனவன் எளியோர்க்கருள் செல்வ னான
தேவனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீருமன்றே....5

No comments: