சஞ்சலங்கள் தருகின்ற வினையிடரைத் தாங்குகின்ற சக்தி வேண்டி
கஞ்சமலர்த் தாள்பற்றிப் பணிந்தேத்தும் அன்பர்க்கே அருள்செய் கின்ற
நஞ்சையணி கண்டமுடன் விண்ணதியும் வான்பிறையும் நயந்த ணிந்த
செஞ்சடையான் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.... 6
வெட்டவெளி தன்னில்சுழல் கோளையெல்லாம் இயக்குகின்ற விமலன் மோன
நிட்டையினில் மறைபொருளை கல்லால்கீழ் சீடர்க்கு போதிப் பானின்
நட்டமிடு செங்கழலில் சாற்றுகின்ற பாமாலை நயந்தேற் கின்ற
சிட்டனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.... 7
பலவாகும் விளையாடல் விழைவோடு புரிவானை பத்தி யாக
இலையோடு மலர்தூவும் அடியாரின் இடர்யாவும் தீர்த்த ழித்துக்
கலனோடு மழுதீவாட் படையேற்றான் புரமூன்றும் கரியாய் செய்த
சிலையேந்தி திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.... 8
புகழ்பொலியும் அருளுரைக்கும் நாவரசர் தமிழ்பாடல் புரிந்து வப்பான்
நிகழ்வதவன் செயலாக நினைவாரின் சித்தமதில் நிற்கு மீசன்
இகழ்வினில்மெய் அன்பர்க்குத் துணையாகக் காக்கின்ற இறைவன் திங்கள்
திகழ்முடியன் திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீருமன்றே.... 9
புரிந்து= விரும்பி.
வெய்யழலாய் ஓங்கியோனை அயன்மாலாம் இருவர்தொழும் விமலன் தானும்
பையரவும் வெண்பிறையும் கங்கையோடு செஞ்சடையில் சூடு கின்ற
தையலுமை பங்குடையான் நாவரசர் பாவலங்கல் தரித்து வந்த
செய்யனுறை திருவதிகை சேர்வார்தம் தீராநோய் தீரு மன்றே.... 10