Saturday, January 26, 2013

திருப்பூந்துருத்தி--- 5

இயலும் வகையில் இறைவன் நினைவாகப்
பயனைக் கருதாப் பணிசெய் அடியாரை
அயலில் பொன்னி அலைபாய் பூந்துருத்தி
அயனின் அருளால் அடையா அருவினையே....9

காற்று பூமி கனல்நீர்  வானாகத்
தோற்று வானைத் துதிக்கும் அடியார்கள்
நீற்றில் ஒளிர்ந்து நிற்கும் பூந்துருத்தி
ஆற்றன் அடியை அடைதல் அழகாமே....10.

Friday, January 25, 2013

திருப்பூந்துருத்தி--- 4

மென்னோக் குடைய விழியாள் தன்கேள்வா
தன்னேர் இல்லா தாளா அஞ்சலருட்
பொன்னே கவினார் பொழில்சூழ் பூந்துருத்தி
மன்னே என்ன மங்கும் வல்வினையே....7


கொடையா யருளிக் குறைதீர்த் தாட்கொள்ளும்
 விடையா கரத்தில் மிளிர்மான்,தீமழுவாட்
 படையா பசிய பொழில்சூழ் பூந்துருத்தி
 சடையா என்னச் சாயும் வல்வினையே....8

திருப்பூந்துருத்தி-- 3

சாவா மருந்தாய்த் தாங்கும் திருப்பெயரை
நாவால் துதித்து நம்பன் அருள்சேரப்
பூவார் நந்த வனம்சூழ் பூந்துருத்தி
தேவா என்னத் தீரும்  தீவினையே....5

தூதா யன்று தோழற் காய்நடந்த
பாதா உமையோர் பாகா மறைவிரிக்கும்
போதா அளிசூழ் பொழிலார் பூந்துருத்தி
நாதா என்ன நாளும் வருமின்பே....6

Sunday, January 20, 2013

திருப்பூந்துருத்தி--- 2

தலையில் மதியை தரித்த அங்கணனை
இலையும் மலரும் இணைப்பூந் தாள்தூவிப்
பொலியும் நதிசேர் பொழிலார் பூந்துருத்தி
நிலையி னானை நினைய நேருமின்பே....3

இன்னல் தந்தே இடர்செய் வினைதன்னை
பின்னம் செய்யும் பெம்மான் பொற்கழலன்
புன்னை மலர்சூழ் பொழிலார் பூந்துருத்தி
மன்னன் பாதம் வாழ்த்த வருமின்பே....4

Saturday, January 19, 2013

திருப்பூந்துருத்தி-- 1

திருப்பூந்துருத்தி
=============

(
கலிவிருத்தம்? 'மா மா மா காய்' என்ற வாய்பாடு.)



உள்ளம் உருகி  உணரும்  அன்புக்கே
அள்ளி வழங்கும் அருளன் துதிபாடிப்
புள்ளி வண்டார் பொழில்சூழ் பூந்துருத்தி
வள்ளல் பாதம் வாழ்த்த வருமின்பே....1

கூற்றை உதைசெய் கோவின்  அடியார்கள்
நீற்றில் மிளிரும் நிமலன் அருள்திறத்தைப்
போற்றும் அலங்கல் பூணும் பூந்துருத்தி
ஏற்றன் பாதம் ஏத்த  எழுமின்பே....2

Tuesday, January 15, 2013

திருப்புன்கூர் --2


 கூவியரன் தாள்பற்றிக் குமுறுகிற பத்தனுக்காய்
தாவியெமன் தனைச்செற்ற தண்ணருளன் சேவினையே
ஏவியவன் நந்தனுக்கு இன்னருளில் விலகவைத்தான்
மேவியபுன் கூரடைய மேல்வினைகள் வீடுமன்றோ....7

நெஞ்சார நினைப்பவரின்  நேயனவன் கைலையினில்
விஞ்சைசேரும் ஆடலினை மேவியவன் நந்தனுக்கு
பஞ்சார்வெள் ளேற்றினையே பையநகர் என்றருள்வான்
மஞ்சாரும் பொழிற்புன்கூர் வணங்கவினை மாயுமன்றே....8

பஞ்சு=பஞ்சைப்போல் நிறத்திற்கு.


சோதித்தே அருள்வழங்கும் துங்கநதிச் சடையுடையான்
பாதித்தன் மெய்யினிலே பங்காக உமையுடையான்
ஆதித்தன் ஒளியாக ஆலின்கீழ் அமர்ந்தறங்கள்
போதிப்பான் புன்கூரைப் போற்ற வினை போகுமன்றே....9

 எல்லை யில்லாத இன்னருள் புரிபவனின்
வெல்ல ஒண்ணாத மெய்சிலிர்க்கும் பேருரைத்து
வில்வ யிலைதூவி வேண்டுவாரின் ஐயனவன்
செல்வன் திருப்புன்கூர் சேர வினைத் தீருமன்றே....10

வெல்ல ஒண்ணாத=ஒப்பில்லாத.

Friday, January 11, 2013

திருப்புன்கூர்-- 1

திருப்புன்கூர்
----------------------------------
(
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா.மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்)

கலைவுறா பத்தியினில் கண்ணாரக் காணவேண்டித்
தலைவனை தில்லையினில் தரிசிக்கும் நந்தனுக்காய்
விலகுவாய் கொஞ்சமென்று விடைக்குரைத்த கைலாய
மலையினான் திருப்புன்கூர் வணங்கவினை மாயுமன்றே....1

திருநாளைப் போவார்தன் தீராத அன்புடனே
ஒருநாளே தரிசித்தால் உய்யும்நாள் எனவேண்டி
வருவாரை விடையேநீ மறைக்காமல் ஒதுங்கென்றான்
இருதாளை புன்கூரில் ஏத்தவினை மாயுமன்றே....2


நீரடையும் வேணியன்பேர்  நினைந்துருக வந்தருளும்
பூரணனைக் காணவரும் புனிதருக்காய் விடையொதுங்கும்
ஆரணிசேர் புன்கூரின் ஆடவல்லான் தாள்தொழவே
போரணியாய் வருவினையை புறங்காணல் எளிதாமே.3


தந்தையாய்த் தாங்குவான் தாள் தரிசித்தே உய்யவந்த
நந்தனார் வழிமறைக்கும் நந்திசற்று விலகவைத்த
அந்தமார் புன்கூரின் அங்கணனை தொழுவாரின்
சிந்தையார்  தீவினைகள் தீபுக்கப் பஞ்சாமே....4


சிரஞ்சேர்கை குவியநிதம் சிவனைநினை அடியாரின்
 உரஞ்சேர்மெய்த் தொண்டினுக்கே உவகையுடன் அருள்செய்யும்
 பரஞ்சோதி மேவுகின்ற பதிபுன்கூர் கண்டுதொழ
 வரஞ்சேரும் முன்செய்த வல்வினைகள் மாயுமன்றே....5