Thursday, November 8, 2012

மழபாடி வயிரத்தூண்-- 1

மழபாடி வயிரத்தூண்
=====================
 (எண்சீர் விருத்தம் - 'காய் காய் மா தேமா' - அரையடி வாய்பாடு)



வெண்பொடியார் மேனியனாய் விளங்கு வானை
....வேணியினில் கூன்பிறையை அணிகின் றானைக்
கண்பனிக்க உள்ளுருகக் கரைந்து வேண்டிக்
....கரங்கூப்பித் தாள்தொழுவார்க் கன்பன் தன்னைத்
தண்பதிகள் பலகண்டு சாற்றும் பத்தர்
...தண்டமிழ்ப்பா மாலைதனில் உவக்கின் றானை
வண்பதியாம் மழபாடி வயிரத் தூணை
....வாயார வாழ்த்தவினை மாயும் தானே....1


பாம்பணியும் கறைமிடறன் பதம்செய் யாடல்
....பரவசமாய்க் கண்டுவக்கும் பத்தர் தம்மின்
தீம்பழிய நன்றுசெயும் தேவ தேவைச்
....சீராரும்  தேவாரம் செவியேற் பானைத்
தீம்பலவும் குலைநிறைந்தத் தெங்கும் ஓங்கத்
....தீங்குயில்கள் கிளையமர்ந்து தேனாய்ப் பாடும்
மாம்பொழில்சூழ் மழபாடி வயிரத் தூணை
....வாயார வாழ்த்தவினை மாயும் தானே....2


1 comment:

Geetha Sambasivam said...

மழபாடி வயிரத்தூண்?? புரியலை, என்ன விசேஷம் அம்மா? குறிப்பாக வயிரத்தூணைச் சொல்லி இருப்பது ஈசனைத் தான் குறிக்குமா?