Thursday, September 6, 2012

உயிரானான் போற்றி -- 1


(அறுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடிவாய்பாடு)


அம்மையொ டாடிடும் ஐயன்
...அடியரின் உளங்கவர் கள்வன்
பொம்மைக ளாகவே நம்மைப்
...புவியினில் நடித்திட வைப்பான்
செம்மையில்  திகழுறும் மெய்யன்
...சிகையினில் நதிமதி சூடும்
செம்மலின் சேவடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....1


ஓதிடும் நான்மறை ஏற்றும்
...ஒருதனி முழுமுத லாவன்
கோதிலன் குணநிதி யாகக்
...குறைகளை தீர்த்திடும் ஈசன்
மாதிடம் வைத்தவன் ஆலம்
...மணிமிட றுடைகறை கண்டன்
நாதியன் சேவடி போற்றி
...நம்பெரு மாடி போற்றி. 
 
உருவமும் அருவமும் ஆவான்
...உடுக்கையும் சூலமும் ஏந்தும்
மருவறு பிறைதனைச் சூடி
...மன்றினில் ஆடிடும் ஐயன்
இருவினை தருமிடர்த் தீர
...இணையடி தொழவருள செய்வான்
திருவனின் சேவடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....3 



ஆறுதல் தந்திட வேண்டி
...அனுதினம்  தொழுதிடும் அன்பர்
தேறுதல் பெற்றிடத் துன்பம்
...தீர்ந்திட இன்னருள் செய்வான்
ஊறிடும் பரிவினில் காக்கும்
...உமையவள் பங்குடை ஈசன்
சீறர வன்பதம் போற்றி
...சிவபெரு மானடி போற்றி....4


பெருகிடும் பத்தியில் அன்பர்
...பிறைமதிச் சடையனின் சீரை
உருகிட இசைத்தநன் மாலை
...உகப்புடன் சூடிடும் ஐயன்
வெருவரு மறலியை எற்றி
...வீழ்த்திஅம் மாணியைக் காத்தச்
செருவனின் சேவடி போற்றி
....சிவபெரு மானடி போற்றி....5 


  

3 comments:

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! எங்கள் ஊர் பற்றிய பாடல் என்பதனால் உங்களது ” திருமழபாடி”
( Thursday, October 27, 2011) என்ற பதிவினை GOOGLE + - இல் பகிர்ந்துள்ளேன். நன்றி!

Thangamani said...

வணக்கம்,இளங்கோ.மகிழ்வுடன் நன்றி.
அன்புடன்,
தங்கமணி.

Geetha Sambasivam said...

பொம்மைக ளாகவே நம்மைப்
...புவியினில் நடித்திட வைப்பான் //

மிக அழகாகச் சொல்லி விட்டீர்கள். நல்ல எழுத்தாற்றல்.