Thursday, September 13, 2012

உயிரானான் போற்றி.-- 2

வார்சடை மேல்நதி  யோடு
...மதியினைச் சூடிடும் ஐயன்
பேர்புகழ் பாடிடு வாரைப்
...பிணித்திடு வினைவிடு விப்பான்
கார்பொழி வாயருள் பெய்வான்
...கரமதில் கலனொடு பிச்சை
தேர்பவன் சேவடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....6


அவ்விடம் இவ்விடம் என்றே
...அனைத்திலும்  அணுவிலும் உள்ளான்
செவ்விய  தீந்தமிழ்ப் பாவில்
...திகழ்கிற பத்தியில் நிற்பான்
நவ்வியன் நான்மறை போற்றும்
...நாயகன் அடிமுடி காணா
செவ்வழ லானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....7


செவ்விய=சிறந்த
நவ்வி=அழகு.

 பேசுவர் அவனுடைப் பெற்றி
...பெரிதவன் தயைசெயும் பாங்கு
சாசுவ தமாயவன் அன்பு
...தன்னை எண்ணுவர்க் கையன்
பூசுவெண் ணீற்றனின்  சீற்றம்
...பொடியென எயிலெரி செய்தத்
தேசுடை யானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....8


அந்த இ லங்கையின் வேந்தை
...அடர்த்தக மடக்கிய ஈசன்
குந்தக மாஇடர்  செய்யும்
...கொடுவினை தீர்த்திடு மெய்யன்
செந்தமிழ்ப் பாவிசைத் தேனை
...செவிமடுத் தின்புறும் எம்மான்
செந்தழ லானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....9


நெளியுநல் லுரகமு டன்வான்
...நிலவையும் நதியையும் சூடும்
கிளிகர மேந்துமை பங்கன்
...கேட்டினைத் தீர்த்தருள் செய்வான்
எளியரின் உறுதுணை யாக
...எங்கணும் நிறைந்தவன் காப்பான்
தெளிசடை யானடி போற்றி
...சிவபெரு மானடி போற்றி....10

4 comments:

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
சிவகுமாரன் said...

அம்மா வணக்கம். கிடைத்தற்கரிய பொக்கிசமாய், இந்த வலையினைக் கண்டு மகிழ்வுற்றேன். நோக்குமிடமெல்லாம் அவனன்றி வேறில்லை என்பது போல் எல்லாம் சிவமயம். நெக்குருகிப் போய் நிற்கிறேன். நான் சிவபக்தன். என் அருட்கவி வலைத்தளத்துக்கு( தாங்கள் வருகை தந்தால் மனம் மகிழ்வேன். தங்களைப் போல நான் முறையாய் தமிழ் கற்றவனல்லன். தமிழ் ஆர்வலன். ) http://arutkavi.blogspot.in/2012/06/blog-post.html

Thangamani said...

அன்புள்ள சிவகுமாரன்,
வாங்க.உங்க பாராட்டுக்கு நன்றி.
உங்கள் கவிதைகளை படிக்கின்றேன்.அருமை!
சிறப்பாக இருக்கிறது.மகிழ்கிறேன்.
வாழ்த்துகள்.பாராட்டுகள்

Geetha Sambasivam said...

நெளியுநல் லுரகமு டன்வான்
...நிலவையும் நதியையும் சூடும்
கிளிகர மேந்துமை பங்கன் //

வர்ணனை அருமை. பல்வேறு பிரச்னைகளால் வெகு தாமதமாகவும் மெதுவாகவும் படித்து வருகிறேன். முக்கியமாய் மின்சாரப் பிரச்னை! :(