Wednesday, September 26, 2012

அப்பனி டம் திருவாலங்காடே.-- 2

கனிதனை அம்மையின் கரத்தில் அன்று
...கனிவுடன் ஈந்தமுக் கண்ணன் அன்பர்
நனைமிகு நறுமலர் நற்றாள் தூவி
... நடமிடு கூத்தனை துதிசெய் வாரின்
புனைகிற தீந்தமிழ்ப் பாடல் மாந்தும்
...பூரணன் அருளினை வழங்கும் ஐயன்
அனலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
...அப்பனி டம்திரு வாலங்  காடே....5


 தங்கமும் வைரமும் சற்றும் ஈடோ
...சங்கரன் தண்ணருள் தானே செல்வம்
செங்கழல் சதங்கையும் செவியில் ஆர்க்க
...சிந்தையில் நிறைந்திடத் தெம்பை வார்க்க
அங்கமும் தேய்ந்திட அரன் தாள் எண்ணி
...அங்கையை ஊன்றியே அம்மை சேரும்
அங்கியைக் கையினில் ஏந்தி ஆடும்
...அப்பனி டம்திரு வாலங் காடே....6

பிணிபவச் சுழலதில் மீள வேண்டிப்
....பெய்கழல் தொழுபவர் பீழை தீர்ப்பான்
தணிவுறு உயர்தவக் கோலம் கொள்வான்
....தனியனாய்க் கானதில் தங்கும் காடன் 
துணியெனப் பிறைதனைச் சூடும் தேவைச்
 ...சூழ்ந்திடும் கணங்களும் சுற்றி ஆர்ப்ப
அணிகுழல் மலைமகள் காண ஆடும்
...அப்பனி டந்திரு வாலங் காடே. ...7
 நீர்க்குமி ழியாகுமிந் நிலையில் வாழ்வில்
...நிலைப்பதும் அவனது நேயம்; எங்கும்
பார்க்கும னைத்துமே பரனாய்க் காணும்
...பத்தியில் உருகிடப் பரிந்து வந்து
தீர்க்குமவ் வினைதனை செந்தாள் கூத்தன்
...துடியுடன் தெறித்திடும் பம்பை நாதம்
ஆர்க்கநள் ளிருளினில் நட்டம் ஆடும்
...அப்பனி .னிடந்திரு வாலங் காடே. ...8

கோதிலன் குணநிறை குன்றா னானின்
...குரைகழல் போற்றிக் கூடும் அன்பில்
நாதியும் அவனென நாடும் அன்பர்
...நடுவினில் துணையென நயமாய் நிற்கும்
நீதியின் உருவவன் நேயச் செம்மல்
...நெறிசெலும் தெளிவினை நெஞ்சில் சேர்க்கும்
ஆதியன் அனலினை ஏந்தி ஆடும்
...அப்பனி டந்திரு வாலங் காடே....9

எங்குளன் எம்பிரான் என்று தேடி
...ஏங்கிடும் எளியரின் இதயம் தன்னில்
தங்குவன்; வெவ்வினைத் தாங்கும் உள்ளம்
...தந்திடும் சங்கரன் தாளைப் போற்றும்
குங்கும முகமலர் குளிர்ந்த பார்வை
...கொண்டவள் கூறுடைக் கோல மேவும்
அங்கணன் அனலினை ஏந்தி ஆடும்
....அப்பனி டந்திரு வாலங் காடே....10
 

2 comments:

Geetha Sambasivam said...

//தங்கமும் வைரமும் சற்றும் ஈடோ
...சங்கரன் தண்ணருள் தானே செல்வம்
செங்கழல் சதங்கையும் செவியில் ஆர்க்க
...சிந்தையில் நிறைந்திடத் தெம்பை வார்க்க //

வார்த்தைகள் வெகு சரளமாக வந்து விழுகின்றன.

Geetha Sambasivam said...

இன்னிக்கு மறுபடியும் இதைப் படிச்சப்போ இந்த இடம் புரியலை. முடிஞ்சால் விளக்கம் கொடுங்க, உங்களுக்கு நேரம் இருக்கையில்.

//அங்கமும் தேய்ந்திட அரன் தாள் எண்ணி
...அங்கையை ஊன்றியே அம்மை சேரும்
அங்கியைக் கையினில் ஏந்தி ஆடும் //

இது எந்தத் திருவிளையாடலைக் குறிக்கும் எனப் புரியவில்லை.