Monday, September 24, 2012

அப்பனிடம் ஆலங்காடு (திருவாலங்காடு) -- 1



(எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)


நீலகண் டமொடுசெஞ்  சடைசேர்  கங்கை
...நிலவுபொன் கொன்றையம் மலரும் சூடி
காலமும் ஆனவன் எமனை எற்றும்
...காலனாய்  மாணியைக் காத்த செம்மல்
கோலமுக் கண்ணுதல் எழிலைக் காணக்
...குலைந்திடும் ஊழ்வினை விண்ணோர்க் காக
ஆலமு துண்டருள்  செய்த எங்கள்
...அப்பனி டந்திரு ஆலங் காடே....1


மருவறு வெண்பிறைச் சடையன்  கையில்
...மான்மழு தீயுடன் சூலம் கொள்வான்
இருவினை தருமிடர் எளிதில் தீர
...இன்னருள் செய்திடும் ஈடில் ஈசன்
கருவுறு பவக்கடல் கடக்கச் செய்வான்
...கண்ணுதல் தருவடி அமர்ந்து தானாய்
அருமறை நால்வருக் குரைக்கும் எங்கள்
  ...அப்பனி டந்திரு ஆலங் காடே....2
ஊனையும் உயிரையும் உருக்கும் தெய்வம்
...ஒப்பிலா தயையினில் உதிக்கும் அன்பில்
வானையும் மண்ணையும் அண்டம் யாவும்
...மாறிடா கதியினில்   வைத்துக் காக்கும்
தானொடு  தனதெனும் அகந்தை போக்கும்
...தண்ணருள் தந்தெமைத் தாங்கும் வள்ளல்
ஆனையின் ஈருரி போர்த்த எங்கள்
...அப்பனி டந்திரு வாலங் காடே....3 
தழையினை மலரினை சாத்தி,தீரா
...சஞ்சலம் தீர்த்திடும் மலர்த்தாள் போற்றிப்
பிழைமலி வாழ்விதில் பீழை யின்றிப்
...பேற்றினில் உய்வினைப் பெறவும் வேண்டின்
விழைவுடன் இன்னருள் விரைந்து செய்வான்
...வேலையின் விடமுணும் மெய்யன் வெய்ய
அழலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
...அப்பனி டந்திரு வாலங் காடே....4
 

கனிதனை அம்மையின் கரத்தில் அன்று
...கனிவுடன் ஈந்தமுக் கண்ணன் அன்பர்
நனைமிகு நறுமலர் நற்றாள் தூவி
... நடமிடு கூத்தனைத் துதிசெய் வாரின்
புனைகிற தீந்தமிழ்ப் பாடல் மாந்தும்
...பூரணன் அருளினை வழங்கும் ஐயன்
அனலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
...அப்பனி டம்திரு வாலங்  காடே....5

நனை=தேன். 

1 comment:

Geetha Sambasivam said...

பிழைமலி வாழ்விதில் பீழை யின்றிப்//

பிழைமலி வாழ்வாகவே உள்ளது. :((( பீழையின்றிச் செல்லப் பிரார்த்திக்கிறேன்.