Tuesday, May 29, 2012

எண்ணுருவன் ஆனைக்கா (திருவானைக்கா) --2

பெறுபவற்றுள் பெரிதவன்சீர் பேறாகப் பாடுபவர்
அறுவினையும் தீர்க்கின்ற ஐயனவன் அமருமிடம்
மறுவறு மணமலர்த்தேன் மாந்துகிற வண்டினங்கள்
உறுபொழில்கள் மஞ்சுவரை உயரானைக் காநகரே....6

அழுதவனை சிந்திக்கும் அன்பரிடர் யாவையுமே
நழுவியகல் வழிசெய்வான் நம்பனவன் அமருமிடம்
கொழுமலரில் தேனருந்தக் கூடுமளி முரலுமொலிக்
கெழுமுகிற பொழில்சூழும் கேடிலா.னைக்காவே....7

கண்ணீரில் ஆணவமும் கரையவழும் இராவணனின்
பண்ணாரும் மறைகேட்கும் பரமனவன் அமருமிடம்
வெண்ணீறு மெய்பூசி விரிசடையன் புகழ்பாடி
மண்ணோர்கள் அடைகின்ற மணிஆனைக் காநகரே....8

நன்றினையே நவகோளும் நல்கிடவும் செய்தருள்வான்
அன்றயன்மால் அறியரியான் அழலானான் அமருமிடம்
நன்மலரில் தேன்மதுவை நாடிமுரல் அளியினங்கள்
பன்மலர் ஆர் பொழில்சூழும் பதிஆனைக் காநகரே....9

பித்தனவன் எரியாடும் பேயனவன் தயைசெய்யும்
நித்தனவன் பவமழிக்கும் நிமலனவன் அமருமிடம்
புத்தலர்கள் மலர்ந்திருக்கும் பூவனத்தில் வண்டினங்கள்
தெத்தெனவென்(று) ஆர்த்திருக்கும் திருவானைக் காநகரே....10

2 comments:

Geetha Sambasivam said...


பித்தனவன் எரியாடும் பேயனவன் தயைசெய்யும்
நித்தனவன் பவமழிக்கும் நிமலனவன் அமருமிடம்
புத்தலர்கள் மலர்ந்திருக்கும் பூவனத்தில் வண்டினங்கள்
தெத்தெனவென்(று) ஆர்த்திருக்கும் திருவானைக் காநகரே....10 //

மிக அருமையாக வந்திருக்கிறது. சொற்கள் இத்தனை இருப்பதே சில சமயம் தெரியறதில்லை. வார்த்தைகளுக்குத் தடுமாற வேண்டி இருக்கு. :((

Thangamani said...

கருத்துக்கு நன்றி கீதா