Tuesday, June 5, 2012

தாராசுரம்--1

கலிவிருத்தம் - 'மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு

சொல்லும்தமிழ் மறைப்பாட்டினில் சுடரும்பர  சிவனார்க்(கு)
அல்லும்பகல் பணிசெய்துயர் அரசாள்பவர் வாழ்வைக்
கல்லில்சொலும் தாராசுரம் காணப்பெறும் பேறாய்
செல்வன்கழல் தொழுவார்களைச் சேராவினை தானே....1

சொற்சித்திர மறையோதிடும் துய்யோர்களின் வாழ்வை
நற்பக்குவ பத்திசெயும் நலமாம்கதை யாகக்
கற்சித்திரம் மொழியும்தளி தாராசுரத் தேவை
அற்சித்திடும் அடியார்களை அடையாவினை தானே....2

அண்ணித்தவன் தாள்போற்றிடும் அன்பால்நெகிழ் பத்திப்
பண்ணிற்றுதி செய்தேவினை படவென்றவர் கதைகள்
மண்ணிற்றிகழ் கலையார்தளி தாராசுரத் தானை
எண்ணிப்பணி அடியார்களை எய்தாவினை தானே.....3

அண்ணித்தவன்= அணுகி அருள்செய்த ஈசன்

கோணில்விரி வானில்மினும் உடுவாயுளன் தாளைப்
பூணும்சிர முடைத்தொண்டரின் பொற்பில்திகழ் வாழ்வைக்
காணும்சுவர் சிற்பத்தளி தாராசுரத் தானை
பேணும்குணம் உடையார்களைப் பிடியாவினை தானே....4

கோண்=அணுவிலும் நுண்மைத்து

வெளியில்நட மிடுவான்கழல் விரைமென்மலர் தூவி
தெளிபத்தியில் தொண்டாற்றிய திடசித்தரின் உய்வை
உளிசொல்கதை சிற்பத்தளி தாராசுரத் தானை
அளியும்மனத் தொடுவாழ்த்திடில் அடையாவினை தானே....5

2 comments:

Geetha Sambasivam said...

உளிசொல்கதை சிற்பத்தளி தாராசுரத் தானை //

ஒரே வரியில் அனைத்தையும் அடக்கிட்டீங்க.

Thangamani said...

ரசனைக்கு மிக்கநன்றி கீதா