Wednesday, May 9, 2012

திருச்சோற்றுத்துறை!-- 1

திருச்சோற்றுத்துறை
----------------------------------

கலிவிருத்தம். 'மா புளிமா புளிமா புளிமா' என்ற வாய்பாடு.
ஒரோவழி தேமா வரும்.
 
கல்லால் தனுசால் கனிவில் வசவால்
எல்லா இடரும் எளிதாய்ப் பொறுப்பான்
வல்லான் குருவாய் வருவான் அறங்கள்
சொல்வான் பிரியான் சோற்றுத் துறையே....1
 
எடுதாள் நடம்செய் இறையைத் தொழவே
அடுதீ வினையும் அகன்றோ டிடுமே
நெடுமூ வெயிலை நெருப்பாய் விழியால்
சுடுவான் பிரியான் சோற்றுத் துறையே....2

கணையார் மதனைக் கடுகிப் பொடித்தான்
இணையாம் வினையின் இடரைக் களைவான்
அணைவான் எளியர்க் கருள்வான் அடியார்த்
துணைவன் பிரியான் சோற்றுத் துறையே....3

ஆல மமுதாய் அருந்தும் அருளன்
பாலன் இடரை பரிவாய் தீர்க்கக்
காலன் நடுங்கக் கழலால் உதைசெய்
சூலன் பிரியான் சோற்றுத் துறையே....4

நாடித் தொழுவார் நலிவும் அகல
ஓடி வருவான் உவந்தே அடியார்
ஆடி டுமெழில் அடிபா டலங்கல்
சூடிப் பிரியான் சோற்றுத் துறையே....5

4 comments:

Geetha Sambasivam said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும், நமஸ்காரங்களும் அம்மா. சந்தவசந்தத்தில் உங்கள் பிறந்தநாள் அறிவிப்பைப் பார்த்தேன். மனமார்ந்த வாழ்த்துகள்.

Thangamani said...

அன்புள்ள கீதா,
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி!
தாமதத்திற்கு மன்னிக்கவும்

Thangamani said...

அன்புள்ள கீதா,
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி!
தாமதத்திற்கு மன்னிக்கவும்

Thangamani said...
This comment has been removed by the author.