(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
விடியலெழு செஞ்சுடரே மேதினியைக் காப்பவளே
வடிவழகி வெவ்வினைகள் வாட்டுமிடர்த் தீர்த்தருளாய்
பொடியணியும் மதியன் தன் பொற்புடைய கற்பகமே
அடியவர்கட் கருந்துணையே அறம்வளர்த்த நாயகியே....1
நையாத வாழ்வுதனை நலிந்தோர்க்கு நல்கிடுவாய்
பையாட ரவத்தானின் பங்குறையும் சங்கரியே
பொய்யாது அருள்வையே புனற்பொன்னிக் கரைதன்னில்
ஐயாறு மகிழ்ந்துறையும் அறம்வளர்த்த நாயகியே....2
பாகத்தைப் பாலுடனே பரிந்துண்ட சுவையாகத்
தேகத்தில் உள்ளத்தில் தித்திக்கும் நாமமம்மா!
சோகத்தைத் தருமூழாம் தீவினையைத் தீருமம்மா!
ஆகத்தைப் பிரியாத அறம்வளர்த்த நாயகியே....3
பாகு+அத்தை= பாகு அதனை.
உருளுகிற புவிதன்னில் உயிரனைத்தும் காப்பவளே
சுருளுடைய கருங்குழலி சுந்தரனின் பங்கினளே
வெருளவரு வினைத்துன்பம் விட்டேகச் செய்திடுவாய்
அருளமுதை அளிக்கின்ற அறம்வளர்த்த நாயகியே....4
அஞ்சுகம்சேர் தோளுடையாய் அருளரசி கயல்கண்ணி
பஞ்சுநிகர் பூங்கழலைப் பற்றவினை ஓடிடுமே
தஞ்சமென உனையடைந்தோம் சஞ்சலங்கள் தீர்த்தருளாய்
அஞ்சனவேல் விழியுடையாய் அறம்வளர்த்த நாயகியே....5
4 comments:
ஐயாறப்பன் கோவிலே குடியிருக்கும்
அறம் வளர்த்த நாயகியாம்
தர்ம சம்வர்த்தினி மீது தாங்கள் புனைந்த பாடல்
சிறப்புடைத்து. அந்தக்கோவிலில் தான் தீராத இன்னல்களையும்
தீர்த்தருள்வாய் என வேண்டிக்கொண்டு வாயிலில் எரியும் அக்னிகுண்டத்தில்
குங்கிலியம் இட்டு வருவர் பக்தர் பெருமக்கள்.
அருமையான பாடல். மோஹனம் பந்து வராளி என இரு ராகங்களிலும்
பாட முடிகிறது. முயற்சிக்கிறேன்.
அறம் வளர்த்த நாயகியை
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
சுப்பு ரத்தினம்.
திரு.சூரி அவர்களுக்கு,
மிக்கநன்றி!
நன்றாகப் பாடினீர்கள்!
கேட்டு மகிழ்வுற்றேன்.உங்கள் சேவைத் தொடரட்டும்!
பாகத்தைப் பாலுடனே பரிந்துண்ட சுவையாகத்
தேகத்தில் உள்ளத்தில் தித்திக்கும் நாமமம்மா! //
உங்கள் உள்ளார்ந்த அனுபவம் தெரிகிறது. நல்ல ரசனை அம்மா. நன்றி.
அன்பு கீதா.
உங்கள் கருத்துக்கு மிகவும்நன்றி
Post a Comment