Saturday, September 3, 2011

திருவிற் கோலமே--2

அகழ்ந்தரி கண்டிடா அடிஎண் நெஞ்சமே
நிகழ்பவை யாவுமே நிமலன் செய்கையே
முகிழ்விரி கொன்றைவெண் முல்லை கண்ணியாய்
திகழ்முடி யானுறை திருவிற் கோலமே....6

அஞ்சிட வந்திடர் அளிக்கும் வெவ்வினை
பஞ்செரி தீயெனப் படவும் செய்குவன்
தஞ்சமென் றண்டிடு தாளை நெஞ்சமே!
 செஞ்சடை யானுறை திருவிற் கோலமே....7

கூர்த்தநன் நடசிவன் குறிஎன் நெஞ்சமே
போர்த்தவெம் புலியதள் பொலியும் எம்பிரான்
ஆர்த்தவெவ் வினையினால் அன்பர் கொள்துயர்
தீர்த்தவன் தானுறை திருவிற் கோலமே....8

கூர்த்தநடம்= நடனக்கலையின் நுட்பங்கள் அமைந்தநடனம்.

பாவடி வானவன் பற்றுக் கோடவன் 
பூவடி தன்னையே பூணென் நெஞ்சமே
தாவடி அரிஅயன் சாற்றும் ஓங்குயர்
தீவடி வானவன் திருவிற் கோலமே....9

மெய்திகழ் வெண்பொடி மேவு மெம்பிரான்
மொய்கழல் பற்றிட முன்னு நெஞ்சமே
பெய்கிற மாரியாய்ப் பேர ருள்தனை
செய்பெரு மானுறை திருவிற் கோலமே.....10

5 comments:

Geetha Sambasivam said...

அருமையான பாடல்கள்.

Thangamani said...

உங்கள் கருத்து எனக்கு உற்சாகம் தருகிறது.
நன்றி!கீதா!

Thangamani said...

வெம்மா தோலினையே
போர்க்கும் பெம்மான் அமர்கோவில் //
இது கொஞ்சம் புரியலையே??

வெம் மா=கொடிய விலங்காகிய புலியின் தோலை
உடையாக உடுத்திய பரமன் என்னும் பொருளில் சொன்னேன்.

நன்றி கீதா!

Thangamani said...

பரமனான பெம்மான் அமர்ந்திருக்கின்ற கோவில் புள்ளிருக்கு வேளூர் ஆகும்.
நன்றி கீதா!

Geetha Sambasivam said...

ஏதோ கவனம், பொருள் பிரித்துப் படிக்கலை. நன்றி அம்மா.