Monday, August 15, 2011

பாரதத் தாயே வணக்கம்!

அருமையான சுதந்திரத்தை அடைந்தவிதம் சொலப்போமோ?
ஒருமனதாய் இளைஞர்தம் ஊனுணர்வில் சுதந்திரமே
வருநாளின் நிச்சயமாம்,மாண்புதரும் விடுதலையே
கருமமென வேள்விதனில் தமையிழந்தார்!புகழ்பெற்றார்!

சிதைந்திடுதல் எண்ணாது செயலொன்றே குறியாக்கி
சுதந்திரமே மூச்செனவும் சொத்தெனவும் கொள்வதொன்றே
இதந்தருமாம்;கவிமொழியில் எடுத்துரைத்த பாரதியின்
பதந்தன்னைத் தொழுதுயர்த்திப் பாரேற்றப் புகழ்ந்திடுவோம்!

நூதனமாம் சாத்திரங்கள் நுவலுகின்ற நுட்பங்கள்
சாதனையாய் பெண்கல்வி சாதிக்கும் என்றுரைத்த
நீதிமன்னன் பாரதியின் நெஞ்சுநிறை வாக்குண்மை!
பேதமின்றி ஆண்பெண்ணும் பெற்றயிரு கண்ணன்றோ?

பாரதத்தாய் விலங்கவிழ்க்க பாரதிவான் முரசறைந்தான்!
வீரமிகு கவிமுழக்கி விடுதலைபெற் றோமென்றான்!
வேரதனில் நீரெனவும் வெல்லுகவி வண்மையினால்
நேரெதிரே சாவினையே நெஞ்சணைத்த வீரருண்டு!

சிறுமியென ஊர்வலத்தில் சென்றமுதல் சுதந்திரநாள்
உறுகின்ற உணர்வதனில் உத்வேகம் உண்டாச்சு!
பொறுப்புடைய அகிம்சையெனும் பொற்புடைய காந்திஜியால்
பெறுமிந்த சுதந்திரத்தில் பெருமிதமாய் நாடுயரும்!

துறவியரும் தியாகிகளும் தோன்றுமுயர் பாரதமாம்!
குறைவில்லா அறிவுவளம் குவிந்துள்ள நாடிதுவாம்!

மண்ணுள்ள நாள்மட்டும் மறவாமல் தீரர்புகழ்
பண்ணதனில் கவிதைதனில் வருமக்கள் உணரச்செய்வோம்!
கண்பனிக்க வந்தித்து கையுயர்த்தி வணங்கிடுவோம்!
விண்ணவரும் பூச்சொறிந்து வீரரையே வாழ்த்துவரே!

(சந்தவசந்தக் குழுவில் சுதந்திரதினம்(2007 வருடம்)நான் எழுதிய பாடல்.)


2 comments:

Geetha Sambasivam said...

ஆஹா, மீள்பதிவா? இந்தப் பாடலைப் படித்ததில்லை. நன்றி பகிர்வுக்கு.

Thangamani said...

மகிழ்வுடன் நன்றி,கீதா!