Saturday, August 20, 2011

இராமேச்சுரம் (இராமேஸ்வரம்)--- 2

உளிசேர் ஒலியாகி உளத்துள் வளரும்கற்
றளியே குடிலாகத் தங்கும் அருளாளன்
துளிவான் பிறைசூடும் துய்யன் அடியார்க்கே
எளியான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....6

தொடரும் வினைதீர்க்கத் துணையாய் வருமீசன்
விடமும் அமுதாக விழுங்கும் கறைக்கண்டன்
சுடரும் ஒளியாவன் தூயன் விழவூரும்
இடபன் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....7

கருப்பா லொருபூவில் கணையை யெறிவேளை
நெருப்பா யெரிசெய்யும் நெற்றி விழியோனும்
திருப்பா விசையாகச் செய்யும் துதிமாந்தி
இருப்பான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....8

கருப்பு=கரும்பு (வலித்தல் விகாரம்)

தொடுத்தான் புரமூன்றும் சுடுதீ அழலாக
விடுத்தான் வரையொன்றை வில்லாய்க் கணையோடு
மடுத்தான் இசைப்பாடல் மலர்தாள் நடமாட
எடுத்தான் அமர்கோவில் இராமேச் சுரம்தானே....9

சிந்தை நிறைகின்ற சீரார் திருநாமம்
விந்தை நடம்செய்யும் விமலன் அடியாரின்
முந்தை வினைமாய்க்கும் முக்கண் நுதல்கொண்ட
எந்தை அமர்கோவில் இராமேச் சுரம்தானே....10

4 comments:

அம்பாளடியாள் said...

சிந்தை நிறைகின்ற சீரார் திருநாமம்
விந்தை நடம்செய்யும் விமலன் அடியாரின்
முந்தை வினைமாய்க்கும் முக்கண் நுதல்கொண்ட
எந்தை அமர்கோவில் இராமேச் சுரம்தானே..

அழகிய பாடல்வரிகளால் மறுமுறை எம்பெருமானின்
தரிசனத்தைப் பெற்ற உணர்வு எனக்குள்ளே .மிக்க
நன்றி அம்மா படைப்பிற்கு .பாராட்டுடன் கூடிய
என் மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றேன் .இன்று என் தளத்தில் ஒரு நகைச்சுவைப் பகிர்வு வாருங்கள்
நேரம் இருந்தால் சிரிக்கலாம் சற்று சிந்திக்கவும் வைக்கும் பகிர்வு இது .

Thangamani said...

படித்துக் கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி...ம்மா!

அன்புடன்,
தங்கமணி.

Geetha Sambasivam said...

கருப்பா லொருபூவில் கணையை யெறிவேளை
நெருப்பா யெரிசெய்யும் நெற்றி விழியோனும் //

ஆஹா, மன்மதன் எரியுண்ட கதை இரண்டே வரிகளில் எவ்வளவு ரத்தினச் சுருக்கமாய் வந்துவிட்டது. நன்றி அம்மா. உண்மையில் பெருமான் தரிசனம் கிடைத்த உணர்வு என அம்பாளடியாள் எழுதி இருப்பது சரியே. எனக்கும் அதே உணர்வு.

Thangamani said...

மகிழ்வுடன் நன்றி,கீதா!