Thursday, January 13, 2011

திருஆனைக்கா ஈசன்!

வினையின் வாதைப் படுத்தும் பாட்டினிலே
...விமலா!துதித்தேன் தமிழ்த்தேன் பாட்டினிலே
எனையும் அருளால் காப்பார் அலைமதியர்
...இறையை நினையார் துன்பில் அலைமதியர்
நினையும் பாடல் ஈசன் தோட்டினையே
...நெகிழ்ந்தே பசியை நீவந் தோட்டினையே
புனையும் பாவும் நுதலோர் கண்ணனுக்கே
...புகழும் ஆனைக் காவின் கண்ணனுக்கே!...6.

நீல மணியாய்க் கண்டக் கறையுடையாய்
...நிலையாய் அடியார் மீதக் கறையுடையாய்
சீல முயர்வாழ் வினைத்தந் தருள்நிதியே
...செல்வ மெல்லாம் நீயே அருள்நிதியே
கோல முறுதாள் மாற்றி நடமிடுவாய்
...கொலுவாய் அம்மை வேண்டும் நடமிடுவாய்
நாலு மறையும் போற்றும் ஐயனையே
...நவில்வோம் திருவா னைக்கா ஐயனையே!...7.

அம்மை = காரைக்கால் அம்மையார்.

5 comments:

Geetha Sambasivam said...

அலைமதியர்
நினையும் பாடல் ஈசன் தோட்டினையே= ஈசன் தோட்டினையே?? இங்கே அர்த்தம் விளங்கவில்லையே? :(

Thangamani said...

//நினையும் பாடல் ஈசன் தோட்டினையே= ஈசன் தோட்டினையே??
இங்கே அர்த்தம் விளங்கவில்லையே? :(//

"தோடுடைய செவியன்"...என்ற நினைவில் நிற்கும் பாடல்.
நன்றி கீதா!

Geetha Sambasivam said...

ஓ, தோட்டின் நினைவே வரலை அம்மா. அசட்டுத் தனமான சந்தேகம் கேட்டதுக்கு மன்னிக்கவும். :(

Thangamani said...

என்னங்க கீதா இது...
சந்தேகம் கேட்டது சரிதான்.இதுக்குப் போய்...
அசட்டுத்தனம்,மன்னிப்பு என்றெல்லாம் சொல்ல வேண்டாமே.
நான் தான் அசடு!சரியா எழுதத் தெரியலே!
அன்புடன்,
தங்கமணி.

Geetha Sambasivam said...

:)))) Thanks Amma.