நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா.
முறைகேட்ட ஆவினுக்கும்,முன்வந்து நீதிதந்துக்
குறைதீர்த்த அரசனுக்கும் கொடுத்தவருள் நினைந்தன்பர்
பிறைச்சடையன் மீதுற்ற பேரன்பில் வடம்தொட்டே
சிறப்பாகத் தேரோடும் திருவிடை மருதூரே ! ..1
ஊணாக உயிராக உற்றிடுமோர் துணையாகக்
காணாத பேரன்புக் கடவுளவன் திகழுமிடம்
பூணாக வெண்ணீற்றைப் புனையடியர் பணிந்தேத்தச்
சேணோங்கு தேரோடும் திருவிடை மருதூரே! ..2
பாந்தமிகு திருநடனம் பரவசமாய் ஆடுமையன்
தீந்தமிழில் தேவாரம் செவிமடுப்போன் விரும்புமிடம்
ஊர்ந்துவரும் ஏறுடையான் உமைநாதன் அடிதொழுதே
சேர்ந்திழுக்கும் தேரோடும் திருவிடை மருதூரே! ..3
குன்றியுளம் படுதுயரைக் குலைத்துபவம் தொலைத்தருள்வோன்
மன்றினிலே நடம்புரியும் மழுப்படையன் மகிழுமிடம்
நன்றினையே நினையுமன்பர் நாதந்தாள் மலர்போற்றிச்
சென்றிழுக்கும் தேரோடும் திருவிடை மருதூரே! ..4
ஏர்மலியும் திருமேனி இலங்குமணி பணியோடு
வேர்,மருவு கொன்றைமலர் மேவுமவன் மகிழுமிடம்
வார்சடையன் பேரன்பர் வாயாரத் துதிசெய்யச்
சீர்மலியும் தேரோடும் திருவிடை மருதூரே! ..5
வயசு கோளாறு
1 year ago
3 comments:
குலைத்துபவம் =இங்கே எனக்குப் புரியலை! :(
மழுப்படையன் = மழு ஆயுதம் ஏந்தியவன் என்ற பொருள் தானே?
//குன்றியுளம் படுதுயரைக் குலைத்துபவம் தொலைத்தருள்வோன்//
குன்றியுளம் படுதுயரைக் குலைத்துபவம் தொலைத்தருள்வோன்
உள்ளத்துயரை அழித்தும்,பிறவாதிருக்கவும் அருள்பவன்.
(உள்ளம் படுகின்ற துயரைக் குலைத்து
குலைத்து=அழித்து
பவம் தொலைத்து=பிறப்புஇல்லாமல் செய்து)
//மழுப்படையன் = மழு ஆயுதம் ஏந்தியவன் என்ற பொருள் தானே?//
aamaam.
அன்புடன்,
தங்கமணி.
ஓ, பவம் என்ற சொல்லா?? கொஞ்சம் குழம்பிட்டேன்! :(
நன்றி அம்மா.
Post a Comment