( ஒரு விகற்ப இன்னிசை வெண்பா )
பற்றும் பழவினையால் பந்தப் படும்வேளை
சற்றும் சிவநாமம் சாற்றுவை நெஞ்சமே!
சுற்றும் கயலுயரத் துள்ளுமெழில் பொன்னியலை
தெற்றும் சிராப்பள்ளி சேர்....1
குருவாய் அமர்வோனின் கோலம் நினைந்தே
உருவாய் ஒளியாய் உணர்வாய் மனமே
தருவான் மலர்பதம் தாயாய் அருள்வான்
திருவார் சிராப்பள்ளி சேர்....2
தொல்வினை சூழ்ந்தே துயர்தரும் போதினில்
வெல்வழி யொன்றினை மேவிடு நெஞ்சமே
மெல்லிய லாளொடு வெள்ளை எருதமர்
செல்வன் சிராப்பள்ளி சேர்....3
அவமாய் அலைந்தே அலமரும் வாழ்வில்
நவமாம் வழியினை நாடிடில் நெஞ்சே
தவமே உருவெனச் சார்ந்தார்க்(கு) அருளும்
சிவனார் சிராப்பள்ளி சேர்....4
தாவல் தருவினையைத் தாண்டி உயர்வுறச்
சேவமர் செல்வனருள் தேடுமென் நெஞ்சமே
நா வல் அடியர் நயமுறப் போற்றிடும்
தேவன் சிராப்பள்ளி சேர்.....5
தாவல் = வருத்தம்
சே + அமர் = சேவமர் ( உடம்படு மெய் 'வ்' வந்து சேவமர் என்றாகியது )
3 comments:
விகற்ப இன்னிசை வெண்பான்னா என்ன அர்த்தம்???
//விகற்ப இன்னிசை வெண்பான்னா என்ன அர்த்தம்???//
வெண்பாவில்,அடிகள்தோறும் எதுகை
ஒன்றிவரத் தொடுத்தல் ஒரு விகறப வெண்பா ஆகும்.
முதல் இரண்டடிகளில் முதல்சீர்களில் ஒரு எதுகையும்
பின்னிரண்டடியில் முதல் சீர்களில் வேறு எதுகையும்
வர அமைத்தால் இருவிகற்ப வெண்பா ஆகும்.
நன்றி!கீதாம்மா!
அன்புடன்,
தங்கமணி.
ஓஹோ, நீங்க சொன்னதும் மறுபடி கவிதையைப் படிச்சேன், ஒரு மாதிரியாப் புரியுது அம்மா. இலக்கணமெல்லாம் அவ்வளவாய்த் தெரியாது. :( படிக்கிறேன், என்றாலும் சிலது புரிஞ்சுக்க முடியலை. விகற்ப இன்னிசை வெண்பாங்கற பெயரையே இப்போத் தான் கேட்கிறேன்.
Post a Comment