Saturday, November 6, 2010

சிராப்பள்ளி சேர்!



அலையாய் அலைந்தே அமைதியை நாடின்
நிலையாய் மலர்தாள் நினையென் மனமே
கலையாய் நடிக்கும் கழலன் இமயச்
சிலையான் சிராப்பள்ளி சேர்....6

சிலை=மலை.

நலம்பெற வைத்து நலி வினைத் தீர்த்தே
வலம்பல நல்கிடும் வாஞ்சைஎண் நெஞ்சே!
தலம்பல ஆடிடும் தாண்டவன் கைலைச்
சிலம்பன் சிராப்பள்ளி சேர்....7

ஆர்த்தெழும் தீவினை அண்டாதென் நெஞ்சமே
வார்த்தையில் சொல்லொணா வாத்ஸல்யம் பொங்கிடப்
பார்த்தருளும் அன்னையாய்ப் பாவையின் துன்பினைத்
தீர்த்தான் சிராப்பள்ளி சேர்....8

பகழியின் கூர்தோய்ப் பறவையாய் நோவ
நிகழும் வினைத்துயர் நீங்கிட நெஞ்சே
தகழி யொளியினில் தண்மலர் தூவத்
திகழ்ந்தான் சிராப்பள்ளி சேர்....9

பகழி=அம்பு.

கட்டும் வினைகள் கயிறாய்ப் பிணிப்பதை
விட்டு விலகிட வேண்டிடின் நெஞ்சமே
இட்டன், அடியருக்(கு) இன்னருள் செய்திடும்
சிட்டன் சிராப்பள்ளி சேர்....10

No comments: