Sunday, November 29, 2009

நிமலனே ! உனைப் பாடுவேன் !

[புளிமா கூவிளம் புளிமா கூவிளம்
...புளிமா கூவிளம் புளிமா கருவிளம்]
(1-௫ மோனை)


முனைந்த வேதமும் விளங்க ஓதியும்
..முயன்று தேடியும் அறிந்தி டாதெம திறைவனே!
புனைந்த பூமலர் சுகந்த மேவிடப்
..பொலிந்த மாலையை அணிந்து காணுமென் தலைவனே!
வனைந்த ஊனிதைத் தொடர்ந்த ஊழ்வினை
..வருத்தி வாட்டுமென் றிரங்கி யாளுமெம் நிமலனே!
நினைந்த போதிலும் உணர்ந்த போதிலும்
..நிறைந்த வாறுளம் நெகிழ்ந்து பாடிட விழைவனே!

முனைதல்=முற்படுதல் , முனைந்த வேதமும்=முற்படும் வேதமும்
வனைந்த=உருவாகிய

Saturday, November 21, 2009

காரைக்கால் அம்மையார் !

புடமிடு பொற்பில் புரிதவ யாக்கைக்
கடனென அம்மைக் கருதிடும் காட்சி
சுடலையின் வெண்தூள் துலங்கிடும் ஐயன்
நடமிடு கோலம் நயந்தளித் தானே.

(காரைக்கால் அம்மைக்கு ஈசன் அருள்செய்தது)

புடமிடு பொற்பில்=புடமிட்டப் பொன்னின் தன்மையில்
புரி தவ யாக்கை=செய்த தவத்தால் கிடைத்தப் பேய் யாக்கை,

"நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப்பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள்" ஈசன் கூற்று.(சேக்கிழார்)
சுடலையின் வெண்தூள் துலங்கிடும் ஐயன்=சுடலையின் வெண்பொடிப் பூசிய ஈசன்.
அம்மைக் கருதிடும் காட்சி = "அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருந்து, பாடி உன்நடம் காண வேண்டும் என்ற வேண்டுதலுக்கு இறைவன் "ஆலம்காட்டில் என்நடம் காண்!" என்று காட்டுவித்தார்.

அன்புடன்,
தங்கமணி

Wednesday, November 18, 2009

அவர் நமர் !

சிவமய மாகத் திகழுருக் கொண்டே
கவருறக் கொல்லக் கருதிடு வோனை
சிவனவன் என்றே தெளிந்திடும் மெய்யன்
அவர்நமர் என்பார் அருள்நினை மனமே!

(மெய்ப்பொருள் நாயனார் தன்னைக் கொல்லவந்த பகைவன் முத்தநாதனுக்கும் அருள்செய்தது)

திருமுறைப் பாடல்!

சிவமய மாக்கும் திருமுறைப் பாடல்
தவமுறைக் காட்டிச் சரணிணைக் கூட்டும்
பவபயம் போக்கும் பரனருள் நாட்டும்
அவனியை உய்க்கும் அருமருந் தாமே!

Monday, November 16, 2009

பெம்மானே ! நம்பினேன் !

சோதித்தே ஆட்கொள்ளும் சூக்குமம்தான் நானறியேன்
போதித்தும் காத்திடுவாய் பூரணனே!-- பாதிக்கும்
துன்பவினை தீர்க்கும் துணையாவாய்! பெம்மானே
நம்பியுனைப் போற்றுமென் நா.

Wednesday, November 4, 2009

முத்தமிழ் வாழ்க


திரு.பசுபதி அவர்கள், புலவர்.குழந்தை அவர்களின் ஈற்றடியை வைத்து
ஓர் ஒன்பதின் சீரடி விருத்தம் இயற்ற,பயிற்சியாகக் கொடுத்தார். அதற்கு நான் இயற்றிய விருத்தம் இது.



குடிபடை வீரம் காதல்
..குடிகொளும் பக்தி நேயம்
...கொண்டிடும் பாங்கு சாற்றும்

படிபுகழ் காவி யங்கள்
..பனுவலின் உன்ன தங்கள்
...பைந்தமிழ்ப் பாவ ளங்கள்

பொடியணி ஈச னாரும்
..புனிதமாம் சங்க மாய்ந்த
...பொற்பெனப் பல்வி தத்தில்

முடியுடை மூவர் செங்கோல்
..முறையினிற் போற்றிக் காத்த
...முத்தமிழ் வாழ்க மாதோ!