Saturday, June 27, 2009

அஞ்சல் அருளும் ஐயா போற்றி!

1.அங்கை அனலோய் அரனே போற்றி!
மங்கை இடமாய் வகுத்தாய் போற்றி!
கங்கைச் சடையோய் கழலே போற்றி!
சங்கை தீர்க்கும் சதுரா போற்றி!

2.மோன நிலையில் மொழிந்தாய் போற்றி!
ஞான ஒளியே நாதா போற்றி!
தீன தயாள சிவனே போற்றி!
கான நடத்தில் களிப்பாய் போற்றி!

3.நீறு புனைந்த நிமலா போற்றி!
கீறு பிறையோய் கீர்த்தி போற்றி!
ஏறுடையவா  ஏற்றம் போற்றி!
மாறு முலகின் மன்னே போற்றி!

4.பேயம் மையினோர் பிள்ளாய்! போற்றி!
வேயன் நதோளி மணாளா போற்றி!
தோயும் அன்பின் துணையே போற்றி!
தாயும் ஆகும் தலைவா போற்றி!

5.ஆரா அமுதே அரனே போற்றி!
பேரா யிரமும் பெற்றாய் போற்றி!
வாரா துவந்த மணியே போற்றி!
தீரா வினையைத் தீர்ப்பாய் போற்றி!

6.மன்றுள் ஆடும் மகேசா போற்றி!
கன்றின் ஆவாய் காப்பாய் போற்றி!
என்றும் இலங்கும் இன்னருள் போற்றி!
என்றன் தேவே இறையே போற்றி!

7.செஞ்சொல் பரவும் சிவமே போற்றி!
விஞ்சும் நடம்செய் வேதா போற்றி!
அஞ்சல் அருளும் ஐயா போற்றி!
நஞ்சம் உண்டோன் நற்றாள் போற்றி!

8 comments:

jeevagv said...

ஒரு சந்தேகம்:
'அஞ்சல்' எனில் அச்சம்/தோல்வி எனவல்லவோ பொருள்?
'அஞ்சேல்' எனவிருக்க வேண்டுமோ?

Thangamani said...

அஞ்சு-அச்சப்படு
அல்- எதிர்மறை விகுதி
அஞ்சல்-அஞ்சேல் பிழை என்றால் திருத்திக் கொள்கிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

jeevagv said...

தங்கமணியம்மா,
பாபநாசம் சிவன் அவர்களும் இச்சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்:
//தஞ்சம் என்றாலே
நெஞ்சம் அருள் சுரந்தே வலிய
தண்முகில் போல வந்து
அஞ்சல் என்று உவந்தருளும் அய்யா//
இப்பாடலைப் பாடுபவர்கள், 'அஞ்சல்' எனப்பாடுவதே வழக்கமாகத் தெரிகிறது.
அவ்விடத்திலும் அஞ்சேல் எனவிருக்கவேண்டுமோ என ஐயம் எனக்குண்டு.

//
அஞ்சு-அச்சப்படு
அல்- எதிர்மறை விகுதி
//
எழுதிய கவிஞரே விளக்கியபின், அங்கு மாற்றுப் பேச்சென்ன?
மிக்க நன்றி!

jeevagv said...

இணையத்தில் தேடிப் பார்த்ததில், மின் தமிழ் குழுமத்தின் இவ்விழை கிடைத்தது:
http://groups.google.com/group/minTamil/msg/970ff4ab8c18a03d?pli=1
பல இடங்களில் அஞ்சல் பயன்படுத்தப்பட்டு இருப்பது கண்டேன்.
மிக்க மகிழ்ச்சி!

Thangamani said...

அன்புள்ள ஜீவா!
அஞ்சலுக்கு விளக்கம் கண்டு கொடுத்ததற்கு மகிழ்ந்தேன்.
மிக்க நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

Geetha Sambasivam said...

மாயவரம் மயூரநாதரின் பாகம்பிரியாளை மயிலாடுதுறை அஞ்சொலாள் என அழைப்பதாய் மின் தமிழில் திரு நா. கணேசன் எழுதி இருந்தார். அது நினைவுக்கு வந்தது. அஞ்சலுக்கு அருளும் என்றும் பொருள் கொள்ளலாமோ எனத் தோன்றியது. பல நாட்கள் கழிச்சு வந்ததுக்கு நல்ல பெரிய கவிதையாகக் கிடைச்சது. நன்றி.

Geetha Sambasivam said...

போற்றித் திரு அகவல்?? ரொம்பவே அருமையாய் ஈசனின் அனைத்துத் திருவிளையாடல்களையும் குறித்திருக்கிறது.

Thangamani said...

அன்புள்ள கீதாசாம்பசிவம்,
உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி!
வாழ்த்துகள்!

அன்புடன்,
தங்கமணி.