Wednesday, July 31, 2013

தென்குடித்திட்டை ('திட்டை')--2

துஞ்சிட நமனையே நெஞ்சினில் உதைத்துடன்
கெஞ்சிய சிறுவனுக் கஞ்சலைத் தந்தவன்
செஞ்சடையானுறை தென்குடித் திட்டையை
தஞ்சமென் றடைபவர் சஞ்சலம் தீருமே....3

கன்னலின் வில்லினன் கனல்பட விழித்தவன்
இன்னலில் காத்திடும் முன்னவன் மதியணி
சென்னியன் மேவிடும் தென்குடித் திட்டையை
முன்னிடும் அடியவர் முன்வினை நீங்குமே....4

முன்னுதல்=கருதுதல்.

வரியதள் அணிபவன் மழவிடை ஊர்பவன்
விரிசடை சேர்பிறை மிளிர;புன் நகையினால்
திரிபுரம் எரித்தவன் தென்குடித் திட்டையை
பரிவொடு பணிபவர் பழவினை பாறுமே....5

 வெண்பனி மலையினன் விண்ணதிச் சடையினன்
பெண்ணுமை பங்கினன் பிஞ்ஞகன் மருமலி
செண்பக மாலையன் தென்குடித் திட்டையை
கண்பனித் தேத்துவார் கடுவினை கழலுமே....6

வேயினில் கீதமாய் வெளிதவழ் காற்றவன்
நோயினில் மருந்தவன் நோற்றிடு நாமமே
தீயினில் ஆடுவான் தென்குடித் திட்டையை
வாயினால் வாழ்த்துவார் வல்வினை மாயுமே....7







Tuesday, July 30, 2013

தென்குடித்திட்டை ('திட்டை')--1

கலிவிருத்தம். 'விளம் விளம் விளம் விளம்என்ற வாய்பாடு.
இதில் பன்னிரண்டு பாடல்கள்.
(
சம்பந்தர் தேவாரம் - 3.35.1 - முன்னைநான் மறையவை ..... தென்குடித் திட்டையே.)

துய்யவெண் பொடிதனில் துலங்கிடும் தூயவன்
ஐயமுண் கலனுடன் அலைந்துமே ஏற்பவன்
செய்யவன் மேவுமூர் தென்குடித் திட்டையை
மெய்யுறப் பணிபவர் வினையெலாம் தொலையுமே....1


ஓர்விழி நுதலினில் உடையசெஞ் சடையவன்
சீர்பெறு திருமுறை செவியுறக் கேட்பவன்
தேர்செலும் விழவுடைத் தென்குடித் திட்டையைச்
சார்கிற அடியவர் தம்வினை சாயுமே....2







Friday, July 26, 2013

திருவாஞ்சியம்--2

மன்னிய மாமணியாய் மறை ஓதிடும் தெய்வமவன்
கன்னலின் வில்லுடையான் தனை தீயெழச் செற்றவனை
உன்னிட அன்பூறும் உயர் பேருடை வித்தகனூர்
தென்னைகள் ஆர்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....6

 ஓங்கழ லாயுயர்ந்தே  ஒளிர் மாமலை ஆனவனின்
பூங்கழல்  நாடியவன் புகழ் பாடிடு வார்க்கருள்வான்
தேங்கிடு மன்பினிலே திகழ் முக்கணன் மேவிடுமூர்
தீங்கனி ஆர்பொழில்சூழ்  திரு வாஞ்சிய நன்னகரே....7

என்றுனை கண்டிடுவேன் எனும் நந்தனின் ஏக்கமற
அன்றருள் செய்தபரன் அடி போற்றிடும் அன்பரையே
நன்றுசெய் தாட்கொளும்பாய் நதி சூடிய ஈசனினூர்
தென்றிசைக் கோன்பணியும் திரு வாஞ்சிய நன்னகரே....8

கூன்பிறை சூடியவன் குழை ஆடிட ஆடிடுவான்
தான் தனி  யானவனாம் தவ மேசெயும்  செஞ்சடையன்
மான்கர மேந்தியவன் மறை ஓதிடும் சங்கரனூர்
தேன்மலர் ஆர்பொழில்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....9


ஒவ்வுதல் தானிலையென் றுயர் சோதியாய் நின்றவனை
பவ்விய மாயடியார் பர விப்பணி பூரணணாம்
நவ்விகை ஏந்துவானூர் நறை மாமலர்ச் சோலைகளில்
செவ்வழி தேன்முரலும் திரு வாஞ்சிய நன்னகரே....10
ஓவ்வுதல்=ஒப்புதல்
நறை=நறுமணம்.

Wednesday, July 17, 2013

திருவாஞ்சியம்--- 1

 திருவாஞ்சியம் 
 --------------------
(
தானன தானதனா தன தானன தானதனா)

ஆலமர் செல்வனவன் அரு மாமறை ஓதியவன்
காலனைக் காய்ந்துதைத்த கழ லன்மத யானையதன்
தோலுடைப் போர்த்தியவன் அருள் செய்பதி ஆவதுதான்
சேலுகள் வாவிகள்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....1

தாணுவென் றேதிகழ்வான் தழ லாடிடும் ஈசனவன்
காணுதற் கேயரிதாம் கழல் நாடிடு வோர்த்துணைவன்
பூணுவன் பாம்பணியாய் புரி வார்சடை யோனுறையூர்
சேணுயர் சோலைகள்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....2

 திங்களை ஏந்துசடை திகழ் செம்மையி லேஒளிர்வான்
சங்கடம் தீர்த்திடுவான் சகம் காத்திடும் உமைபங்கன்
அங்கணன் நீலகண்டன் அடி யாருளம் மேயவனூர்
செங்கயல் பாய்புனல்சூழ் திரு வாஞ்சிய நன்னகரே....3

ஆரணி செஞ்சடையான் அடல் ஏற்றினில் ஊர்ந்திடுவான்
வாரணி நன்மலர்சேர் வழி பாட்டினி லேமகிழ்வான்
பூரணி பங்குடையான் பொடி பூசிய மெய்யனினூர்
சீரடி யார்திரளும் திரு வாஞ்சிய நன்னகரே....4

ஐய னருள்விரும்பும் அடி யார்மனக் கோவிலுளான்
நைய வரும்வினையை நலிந் தோடிடச் செய்திடுவான்
வைய மெலாம்புரக்கும் மதி சூடிடு வானிடமாம்
செய்யில் கொக்கிரைதேர் திரு வாஞ்சிய நன்னகரே....5

Sunday, July 14, 2013

திருவீழிமிழலை---2

6)
கூன்பிறை பாம்பொடு குதியலை சூடியே
தேன்பொழில் மிழலையு ளீரே
தேன்பொழில் மிழலையு ளீரும கழல்தொழ
ஊன்பிறப் பிலாநிலை உறுமே.
7)
ஊர்விடை அமர்ந்தவ உமையோர் பங்க,வான்
ஆர்பொழில் மிழலையு ளீரே
ஆர்பொழில் மிழலையுளீ ரும கழல்தொழ
தீர்வுறும் வினையிடர் திடமே.
8)
சாம்பலை மேனியில் தரித்தருள் தந்திடும்
தீம்பொழில் மிழலையு ளீரே
தீம்பொழில் மிழலையு ளீருமை தொழஎமை
நோம்படி செய்யிடர் நோமே.
9)
போதமும் மோனமாய் புரிந்தருள் தருகிற
கோதறு மிழலையு ளீரே
கோதறு மிழலையு ளீரும தடிதொழ
தீதறும் வளமுறும் திடனே.
10)
அக்கர மைந்தினை அடியவர் ஓதவும்
திக்கருள் மிழலையு ளீரே
திக்கரு மிழலையு ளீருமை நினைபவர்
தக்கநல் வாழ்வுறல் சதமே.

திக்கு=ஆதரவு.


Thursday, July 11, 2013

திருவீழிமிழலை---1

(திருமுக்கால் அமைப்பில். 1, 3-ஆம் அடிகள் அளவடி. 2, 4-ஆம் அடிகள் சிந்தடி. இடைமடக்கு அமைந்து வரும்.
4
விளம்
2
விளம் + மா
4
விளம்
2
விளம் + மா)

1)
விரிமரை கொடுஅரி தாள்தொழ அடைபதி
திரிமுகில் மிழலையு ளீரே
திரிமுகில் மிழலையு ளீருமை விழைபவர்
புரிவினை தீருமப் போதே.
2)
நரைவிடை யீருமை  அரிதொழ அடைபதி
திரைநதி மிழலையு ளீரே
திரைநதி மிழலையு ளீருமை மேவுவார்
புரைவினை விலகுமப் போதே.

புரைவினை=பாவவினை.
3)
தெறிவிழி மலர்கொடு தொழவரி அடைபதி
வெறிகமழ் மிழலையு ளீரே
வெறிகமழ் மிழலையு ளீருமை நினைபவர்
செறிவினை விலகியே செலுமே.
4)
எண்ணிட நிறைமலர் விழிகொடு அடைபதி
தண்ணெழில் மிழலையு  ளீரே
தண்ணெழில் மிழலையு ளீருமை நினைந்திட
நண்ணிய இடரிலை நலமே.
5)
படியினை அடியவர் பசியற அருளிய
படிபுகழ் மிழலையு ளீரே
படிபுகழ் மிழலையு ளீருமை எண்ணிடில்
பொடிபட இடர்வினை போமே.

Friday, July 5, 2013

திருநெடுங்களம்---5

வரியதள் உடுத்துவெண் மதிநதி யோடு
...மணமலர்க் கொன்றையைச் சூடிய முடியும்
எரியழல் கானதில் இணையிலா ஆடல்
...ஈர்ப்புடன் ஆடிடும் இன்னருட் தாளும்
அரியயன் அலைந்துமே அடைந்திடா வண்ணம்
...அழலென உயர்ந்தயெம் அதிசய மான
அரியனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....9

 கீற்றென வெண்பிறை சூடிடும் சிவனே
...கெடுவினை தருதுயர் தீர்த்திடு முன்னைச்
சாற்றியே 'அருள்கஎம் சங்கரா' என்று
...தாளினைப் பிடித்தழும் பத்தனைக் காக்கச்
சீற்றமோ டெமனைசெங் கழலினால் உதைத்தச்
...செய்யனே சடைதனில் திகழ்தரும் கங்கை
ஆற்றனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே.

Wednesday, July 3, 2013

திருநெடுங்களம்-- 4

தணிமிகு பனிமலைத் தலைவனே உமையாள்
...தனையொரு கூறுடை தாண்டவா தீராப்
பிணியெனும் முன்வினைப் பீழையை நீக்கி
...பீடுற வாழ்ந்திடும் பெற்றியை கேட்டேன்
பணியென உன்புகழ் பாடியே நாளும்
...பைங்கழல் தொழுதிடும் பத்தருக் கென்றும்
அணியனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்கத் தரனே....7

தணி=குளிர்ச்சி.  பீழை=துன்பம்.

உமையலால் துணையென ஒருவரும் இல்லை
...உமதிணை கழலினை உன்னினேன் ஐயா
இமையதாய்க் காத்தருள் என்றுமை வேண்டி
...இணையிலா உம்புகழ் ஏற்றிடு வேனின்
சுமையதாம் ஊழதன் துன்பினைச் சின்னத்
...தூசென ஊதிடும் துய்யனே நஞ்சுண்
அமுதனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....8

Monday, July 1, 2013

திருநெடுங்களம்-- 3

கண்ணியென் றிளம்பிறை கவினுறத் தோன்றக்
...கங்கையும் உடன் திகழ் கற்றைவார் சடையா
புண்ணிய .னேஉன பொற்கழல் தன்னைப்
...போற்றிடும் அடியவர்ப் புகலென நின்றுப்
பண்ணிசைத் தீந்தமிழ்ப் பாக்களைக் கேட்டே
..பரிவுடன் அன்பரைப் பார்த்தருள் புரியும்
அண்ணலே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....5

அழலென ஓங்கிய அண்ணலே அயன்மால்
...அறியவும் முடிந்திடா அடிமுடி யோனே
நிழலென எமைவினை நெரித்திடர் படுத்தும்
...நிமலனே துன்பினை நீங்கிடச் செய்வாய்
கழலிடு நடமதில் கனிந்துமே அம்மை
...காணவும் இசைக்கவும் அருளிய எங்கள்
அழகனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும்  நெடுங்களத் தரனே....6