Wednesday, June 26, 2013

திருநெடுங்களம்--1

எண்சீர் விருத்தம் - 'விளம் விளம் விளம் மா' அரையடி வாய்பாடு.
(
சம்பந்தர் தேவாரம் - இலம்பையங்கோட்டூர்ப் பதிகம் - 1.76.1 )

விடியலை வேண்டியே துயருறும் மாந்தர்
...மிடியிலா வாழ்வினைப் பெற்றிட வேண்டும்
கடியதாம் சுடுதணல் சொல்லதும் வீசும்
...காற்றதன் வருடலாய் மேவிட வேண்டும்
பொடியினை பூசியே அஞ்செழுத் தோதிப்
...பூவிலைத் தூவியே நினைந்திடும் அன்பால்
அடியனேன் வேண்டுவ தடைந்திட அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....1


அறையலை வானதி சிரமதில் ஏற்ற
...அண்ணலே உன்னருள் தன்னையே கேட்பேன்
குறைமலி வாழ்விதைப் பொருள்பெறு வாழ்வாய்க்
...கொண்டிடப் பிறர்நலம் பேணிடும் தன்மை
பொறைகுணம் இரங்கிடும் உணர்வுடன் அன்பைப்
...பொழிந்திடும் மழையெனும் பொன்னுளம் மேவ

அறவனே அத்தனை நலமுற அருளாய்
...அருநட மாடிடும் நெடுங்களத் தரனே....2

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// குறைமலி வாழ்விதைப் பொருள்பெறு வாழ்வாய்க்
...கொண்டிடப் பிறர்நலம் பேணிடும் தன்மை ///

சிறப்பான வரிகள் அம்மா... வாழ்த்துக்கள்...

Thangamani said...

தாமதமாய்ப் பார்த்தேன்.
மிக்கநன்றி தனபாலன்.