Monday, October 22, 2012

மயிலாடுதுறை-- 1

(தேமாங்கனி கூவிளம் கூவிளம் தேமா)

தெம்போடரன் ஆடிடும் சீர்கழல் எண்ணி
சம்போவெனும் அன்பரைத் தாங்குவான் ஊராம்
செம்போதலர் தேனுணச் சேர்ந்தளி ஆர்க்கும்
வம்பார்பொழில் மாமயி லாடுது றையே....1

அஞ்சேவடி பாடிடும் அன்பரை உய்க்கும்
பிஞ்சார்பிறை சூடிய பிஞ்ஞகன் ஊராம்
செஞ்சேலுகள் நீர்வயல் சீருறக் காணும்
மஞ்சார்பொழில் மாமயி லாடுது றையே.2

தானாயவன் வந்தருள் தந்திடும் நேயன்
மீனார்விழி மாதவள் மேயவன் ஊராம்
தேனார்குயில் கூவிடும் செவ்விசை சூழும்
வானார்பொழில் மாமயி லாடுது றையே....3

ஐந்தாகிய அக்கரன் அஞ்சலைத் தந்து
நைந்தார்வினை நீக்கும் நம்பரன் ஊராம்
பைந்தேனுணும் வண்டினம் பண்ணொலி ஆர்க்கும்
மைந்தார்பொழில் மாமயி லாடுது றையே....4

முந்தாவணம் ஊழ்வினை முற்றுமே நீங்கத்
தொந்தோமென ஆடிடும் துய்யவன் ஊராம்
கொந்தார்மலர் வண்டினம் கூடிப்பண் பாடி
வந்தார்பொழில் மாமயி லாடுது றையே....5

1 comment:

Geetha Sambasivam said...

கொந்தார்மலர் வண்டினம் கூடிப்பண் பாடி
வந்தார்பொழில் மாமயி லாடுது றையே....5//

இப்போ இப்படி இருக்கோ இல்லையோ, ஒரு காலத்தில் இப்படித்தானெ இருந்திருக்கும். அதைக் கண் முன்னே கொண்டு வருகிறது.