Thursday, October 25, 2012

மயி லாடுது றை--- 2


முந்தாவணம் ஊழ்வினை முற்றுமே நீங்கத்
தொந்தோமென ஆடிடும் துய்யவன் ஊராம்
கொந்தார்மலர் வண்டினம் கூடிப்பண் பாடி
வந்தார்பொழில் மாமயி லாடுது றையே....5


நோவாய்வரும் ஊழினை நூக்கியே மாய்க்கும்
சேவூர்பவன் ஊண்பலித் தேர்பவன் ஊராம்
தூவார்மலர்த் தேனுணும்  தும்பிகள் பாடல்
ஓவாப்பொழில் ஒண்மயி லாடுது றையே....6

தூ+ஆர்=தூவார்
தூ=தூய்மை
நூக்குதல்=தள்ளுதல்

மீண்டும்கரு வாயுரு மேவிடேன் என்று
வேண்டும்சிவ பத்தரின் மெய்யிறை ஊராம்
தூண்டும்கவின் வான் தரு தொட்டுயர் திங்கள்
தீண்டும்பொழில் தென்மயி லாடுது றையே....7 


தூண்டுகிற எழிலுடைய வான் திங்களை உயர் தரு
தொட்டுத்தீண்டும் பொழில் என்று கொண்டுகூட்டிப்
பொருள் கொள்ளவேண்டும்.

 
கண்டார்பிணி தீர்த்திடும் கண்ணுதல் ஆடல்
கொண்டாடிடு வார்க்கருள் கூட்டுவன் ஊராம்
தண்டாமரைப் பூவினில் தங்கியே தேன் தேர்
வண்டார்பொழில் மாமயி லாடுது றையே....8


நீரானவன் தீவளி நீள்விசும் பாகிப்
பாரானவன் அன்பரின் பற்றவன் ஊராம்
ஏராழ்வயல் நெற்கதிர் எங்குமே சாய்ந்து
சீரார்கிற தென்மயி லாடுது றையே....9


பிட்டேயுணக் கூலியாய்ப் பேதைமுன் வந்து
பட்டானடி அன்பருள் பண்பினன் ஊராம்
மொட்டாயலர்ப் பூவளி  மோதியே பாடும்
மட்டார்பொழில் மாமயி லாடுது றையே....10 

1 comment:

Geetha Sambasivam said...

நூக்குதல்=தள்ளுதல்

புதிய சொல் தெரிந்து கொண்டேன்.

இங்கேயும் மீண்டும் பிறவி வேண்டேன் எனப் பிரார்த்திப்பார்கள் என்பதும் புதிய செய்தி. எங்கள் பூர்விகமான பரவாக்கரைக்கு அருகிலுள்ள கருவிலி தான் அப்படிச் சொல்வார்கள். நாவுக்கரசர் பதிகம் உள்ளது.