Sunday, June 17, 2012

திருப்பரங்குன்றம் --1

  
(அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு) 


அரியுடன் அயனறி யாத 
...அடிமுடி தனைஉடை யானும் 
எரிகடத் திடைநடம் ஆடி 
...இடுபலிக் கேஅலை வானும் 
பரிவொட ருள்பொழிந் தேநம் 
...பழவினை தீர்த்திடு வானும் 
திரிதரு எயிலெரித் தானும் 
...திருப்பரங் குன்றமர்ந் தானே....1


 நுரையிடைக் குமிழிய தாக 
...நொடித்திடும் இயல்புடை வாழ்வில் 
குரைகழல் நடமிடு தாளைக் 
...கும்பிட வந்தருள் வானும் 
தரையுள உயிர்களைத் தாங்கித் 
...தழைத்திடச் செய்திடு வானும் 
சிரமதில் பிறையுடை யானும் 
...திருப்பரங் குன்றமர்ந் தானே....2

வழுமலி உலகியல் வாழ்வில் 
...மாண்புறு நிலைபெற எண்ணித் 
தொழுதிடு அடியவர்த் துன்பைத் 
...துடைத்துநல் வழியமைப் பானும் 
விழுகதிர் போல்நிறத் தானும் 
...விரிசடை மேல்நதி சூடி 
செழுமண மலரணி வானும் 
...திருப்பரங் குன்றமர்ந் தானே....3

கீறணி பிறையுடை யானும் 
...கிலிதரு வினைதுடைப் பானும் 
வீற ணி போர்விடை யானும் 
...விண்ணவர் தம்பெரு மானும் 
கூ றணி உமைஇடத் தானும் 
...குதியலை நதியுடை யானும் 
சீறர வம்புனை வானும் 
...திருப்பரங் குன்றமர்ந் தானே ....4

வில்லலர் கணைமதன் வீழ 
...விழித்திடு சினமுடை யானும் 
கல்லலர் என்றிட ஏற்கும் 
...கருணைசெய் மனமுடை யானும் 
சொல்லற நலிவுறும் போதும் 
...துணையென முன்வரு வானும் 
தில்லையில் ஆடலி னானும் 
...திருப்பரங் குன்றமர்ந் தானே....5  

  

2 comments:

Geetha Sambasivam said...

திருப்பரங்குன்றம் வர்ணனை நன்றாக உள்ளது. உங்கள் கவிதைத் தொகுப்புப் புத்தகமாய் வந்திருக்கிறதாய்ப்படிச்சேன். வாழ்த்துகள் அம்மா. மேன்மேலும் பற்பல சிறப்புகளைக் காணவும் வாழ்த்துகிறேன்.

Thangamani said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி கீதா