Monday, July 27, 2009

வெண்காடடை மனமே!

பற்றும் இருவினையில் பங்கம் உறுவதுமேன்?
சற்றும் சிவநினைவில் தோய்தல் நலம்பயக்கும்
நெற்றி விழிஅழலன் நீல மணிமிடறன்
வெற்றி தரும் அரனின் வெண்கா டடைமனமே!

பாத மிடுநடனம் பார்க்கப் பரவசமாம்
சீத மிகுமிமய சீலன் அருள்விழைந்து
காத லுறுமனதில் காட்சி தருமிறையாம்
வேத முழுமுதல்வன் வெண்கா டடைமனமே!

பண்ணீ ரொருதவமும் பாவ வினையொழிமின்!
கண்ணீ ரதிலுணர்ந்து காணும் அருள்நிதியன்
தண்ணீ ரென உயிரைத் தாங்கும் இறைவனவன்
வெண்ணீ றணிஅரனின் வெண்கா டடைமனமே!

Sunday, July 19, 2009

சரணிணை அருளாய்!

செஞ்சடை யோனே! செங்கழல் பாதா!
...திருமுக ஒளியினில் நிறைமனம் பெறவை!
நஞ்சமு துண்டாய்! நம்பிடு வோர்க்கு
...நலமுறு கருணையை நயமுடன் புரிவாய்!
அஞ்சலி செய்தே அன்புடன் ஓர்ந்தால்
...அமுதினு மினிதெனும் அகமதில் வருவாய்!
சஞ்சல மில்லா சாந்தியை வேண்டின்
...சடுதியில் அடைகென சரணிணை அருளாய்!

Saturday, July 11, 2009

ஏழிசை அரசி!

நிலைமண்டில ஆசிரியப்பா.

நல்லிசை வாணி!நான்முகன் தேவி!
கல்வியும் நீயே!கலைகளின் ராணி!
யாழிசை ஒலிநீ!ஏழிசை அரசி!
தூயநின் பதமே தொழுதேன் தாயே!
சந்ததம் உனையே சரணெனக் கொண்டேன்!
உன்றனின் அருள்தான் உற்றிடு புகலாம்!
செந்தமிழ் பாக்கள் சிறப்புறப் புனைய
செம்பொருள் தேர்சொல் செல்வமாய் அருளே!

Wednesday, July 8, 2009

முருகா! வரம்தா!

நினதுரு வேதான் நினைவாய் உணர்வால் நெகிழ்ந்தேன்!
நினதிரு தாளே நிறைவாய் பொருளாய் நினைந்தேன்!
கனலுரு வானாய்! கனியே! முருகா! கரைந்தேன்!
மனதிரு ளூடே வருவினை நீங்கும் வரம்தா!

Tuesday, July 7, 2009

நடம்காணீர்!

பம்பைத் துடியொலியும் பாடலும் சங்கமிக்க
நம்பன் பயிலும் நடம்காணீர்!-- தும்பை
மருவுடன்நன் கொன்றை மலர்சூடும் கூத்தன்
அருளமுதப் பார்வை அழகு.