Wednesday, March 20, 2013

திருநீலக்குடி--- 2

 எல்லா மவனாய்  எங்கும் நிறைந்தானைச்
சொல் ஆர்  தமிழ்ப்பாத் துதியால் தொழுதேத்தும்
நல்லார் துணைவன் நந்த வனமோடு
நெல்லார் வயல்சூழ் நீலக் குடியாரே....6

 கழலார் திருத்தாள் கதியாய்ப் பணிவாரின்
சுழலார் வினையின் துன்பை தீர்க்கின்ற
அழலார் கரத்தர் அஞ்சல் அருள்கின்ற
நிழலார் சோலை நீலக் குடியாரே....7

ஒற்றை யாக  உடுக்கை ஒலியோடு
கற்றைச் சடையர் கானில் நடம்செய்யும்
உற்ற வரிவர் உறுநர்த் துணையாவார்
நெற்றி விழியர் நீலக் குடியாரே....8

 உறுநர்= தொண்டர்.

கூடும் அன்பில் கூம்பும் கரமோடு
சூடும் மலர்த்தாள் தொழுவார்க் கருள்செய்வார்
நாடும் முடிதாள் அயன்மால் அறியாது
நேடும் சோதி நீலக் குடியாரே....9


விஞ்சும் பரிவில் வேண தருள்வாரைத்
தஞ்சம் எனத்தாள் தன்னைத் தொழுமன்பர்க்(கு)
அஞ்சல் என்றே அந்த கனைச்செற்று
நெஞ்சில் உதைத்தார் நீலக் குடியாரே....10

No comments: