Friday, March 8, 2013

நஞ்சனகூடு -- 2

 சிந்தை நொந்திடர் செய்திடும் வெவ்வினை நீங்கிட
சுந்த ரேசனைத் தோத்தரித் தேயடை நெஞ்சமே
செந்த மிழ்தனில் தேன்சுவைப் பண்ணினை மாந்துவன்
நந்தி ஊர்கபி .னிக்கரை நஞ்சன கூடதே....6

 விட்டி டாதிடர் விஞ்சிடும் வெவ்வினை வென்றிட
நிட்டை யன் தயை நேடிடச் சென்றடை நெஞ்சமே
பிட்டை யுண்டிட பெண்ணவள் கூலியாய் ஆடிய
நட்டன் ஊர்கபி .னிக்கரை நஞ்சன கூடதே....7

நேடி=தேடி என்னும் பொருளில்.

விதிய தன்வழி மேவிடு வாழ்வினில் உய்வுறப்
பதிய வன்கழல் பற்றிடச் சென்றடை நெஞ்சமே        
கதிய வன்வழி காட்டுவன் செஞ்சடை மீதொரு
நதியன் ஊர்கபி .னிக்கரை நஞ்சன கூடதே....8

கானல் நீரெனக் காணுமிவ் வாழ்வினில் உய்வுற
மோன மா தவன்  தாள்தொழு தேயடை நெஞ்சமே
ஆனைத் தோலுடை அங்கணன் அஞ்செழுத் தானருள்
ஞானன் ஊர்கபி .னிக்கரை நஞ்சன கூடதே. ...9


தோணி யாய்பவத் துன்பினைத் தாண்டிடச் செய்குவன்
பூணென் றேஅராப் பூண்பவன் சென்றடை நெஞ்சமே
ஆணிப் பொன்னவன் அன்பினுக் காட்படும் பாம்பரை
நாணன் ஊர்கபி .னிக்கரை நஞ்சன கூடதே....10


2 comments:

அம்பாளடியாள் said...

அருமையான இப் பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா .

Thangamani said...

மிக்கநன்றி ம்மா.வருகைக்கு மகிழ்ச்சி.