(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
விடியலெழு செஞ்சுடரே மேதினியைக் காப்பவளே
வடிவழகி வெவ்வினைகள் வாட்டுமிடர்த் தீர்த்தருளாய்
பொடியணியும் மதியன் தன் பொற்புடைய கற்பகமே
அடியவர்கட் கருந்துணையே அறம்வளர்த்த நாயகியே....1
நையாத வாழ்வுதனை நலிந்தோர்க்கு நல்கிடுவாய்
பையாட ரவத்தானின் பங்குறையும் சங்கரியே
பொய்யாது அருள்வையே புனற்பொன்னிக் கரைதன்னில்
ஐயாறு மகிழ்ந்துறையும் அறம்வளர்த்த நாயகியே....2
பாகத்தைப் பாலுடனே பரிந்துண்ட சுவையாகத்
தேகத்தில் உள்ளத்தில் தித்திக்கும் நாமமம்மா!
சோகத்தைத் தருமூழாம் தீவினையைத் தீருமம்மா!
ஆகத்தைப் பிரியாத அறம்வளர்த்த நாயகியே....3
பாகு+அத்தை= பாகு அதனை.
உருளுகிற புவிதன்னில் உயிரனைத்தும் காப்பவளே
சுருளுடைய கருங்குழலி சுந்தரனின் பங்கினளே
வெருளவரு வினைத்துன்பம் விட்டேகச் செய்திடுவாய்
அருளமுதை அளிக்கின்ற அறம்வளர்த்த நாயகியே....4
அஞ்சுகம்சேர் தோளுடையாய் அருளரசி கயல்கண்ணி
பஞ்சுநிகர் பூங்கழலைப் பற்றவினை ஓடிடுமே
தஞ்சமென உனையடைந்தோம் சஞ்சலங்கள் தீர்த்தருளாய்
அஞ்சனவேல் விழியுடையாய் அறம்வளர்த்த நாயகியே....5