Thursday, June 16, 2011

கழுமலம் அடைநெஞ்சே (சீர்காழி)

தினமரன் புகழ்பாடி திருவருள் தனைநாடி
மனமொழி செயல்மேவி வழிபட அடைநெஞ்சே
சினமுறு நகையாலே திரிபுரம் எரிசெய்தான்
கனவிடை உடையானூர் கழுமல நகர்தானே....6

எனதென உளவென்றும் இறையவன் அருளொன்றே
தினமொரு முறையாகில் சிவனைஎண் வினைதீரும்
மனதவன் வசமாகும் வழிபெற அடைநெஞ்சே
கனலுமிழ் விழியானூர் கழுமல நகர்தானே....7

புதிர்தனில் விடைதேடும் புரிதலில் புவிவாழ்வில்
எதிர்வரு வினைசெய்யும் இடர்கெட அடைநெஞ்சே
சதிர்தனில் உலகுய்யத் தனிநடம் புரிகின்ற
கதிர்மதி அணிவானூர் கழுமல நகர்தானே...8

தொலைதரு வினைமாய்ந்துத் துகளென அருள்வானின்
சொலமிக சுவைநாமம் துணையென அடைநெஞ்சே
பலவகை மலர்சூடும் பணியினை இடைமீதில்
கலைதரி பெருமானூர் கழுமல நர்தானே....9

தொல்லை=தொலை இடைக்குறை.

இணர்மலர் மதிசூடும் எழில்சுடர் சடையோனை
தணலுறு எரிகானில் தனிநடம் புரிவானை
துணையென இமையோரின் துயர்கெட மதில்மூன்றை
கணைகொடு சுடுவானூர் கழுமல நகர்தானே....10

4 comments:

சிவகுமாரன் said...

துள்ளி விளையாடும் சந்தம். அழகாக இருக்கிறது. சீர்காழிக்கு கழுமல நகர் என்ற பெயர்.... எனக்கு புதிய செய்தி.

Thangamani said...

உங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும் மகிழ்ச்சி.
மிக்கநன்றி!சிவகுமாரன்!
அன்புடன்,
தங்கமணி.

Geetha Sambasivam said...

அருமை அம்மா. கழுமலம் என்ற பெயர் பலருக்கும் புதியதாய் உள்ளது.

Thangamani said...

வாங்க கீதா,
உங்க வருகைக்கு நன்றி!
திரு.சிவசிவா அவர்கள் இடுகையில்,
கீழ்க்காணும் பெயர்கள் காணப்படுகின்றன.
(சிவாவுக்கு நன்றி!)

சீர்காழியின் 12 பெயர்கள்:
பிரமபுரம் = 1
வேணுபுரம் = 2
புகலி = 3
வெங்குரு = 4
தோணிபுரம் = 5
பூந்தராய் = 6
சிரபுரம் = 7
புறவம் = 8
சண்பை = 9
காழி = 10
கொச்சை = 11
கழுமலம் = 12