விளம் புளிமாங்காய் விளம் புளிமாங்காய் - என்ற வாய்பாடு.
மிடிசெயு பவமென்னும் வினைதரும் தளைநீங்கி
விடுபடு நிலைவேண்டில் விழைவொடு அடைநெஞ்சே
கொடிமண மலரோடு குவிமுகை அவிழ்கொன்றை
கடிமலர் பொழில்சூழும் கழுமல நகர்தானே...1.
உயவினை அளிஊழில் உழல்கிற நிலைதீர
நயமுறு நெறிவேண்டி நலம்பெற அடைநெஞ்சே
இயமனை உதைசெய்தே இணையடி தருவானின்
கயலுகள் வயல்சூழும் கழுமல நகர்தானே...2.
உயவு= வருத்தம்.
செவியணி குழையாடச் சிவநட மிடுகோலம்
குவிகரம் சிரம்கொண்டு குரைகழல் நினையன்பர்
புவிபுகழ் தமிழ்பாடப் புகல்தரும் பதியான
கவினுறு பொழில்சூழும் கழுமல நகர்தானே...3.
கிலிதரும் மரணம்தான் கெடுவென வரும்போது
நலிவினை அடையாமல் நலம்பெற அடைநெஞ்சே
புலியதள் உடையானின் புகலடி நினைவாரின்
கலிமலி விழவாரும் கழுமல நகர்தானே...4.
கெடு=தவணை.
சிறையெனு இகவாழ்வில் தெளிவினைப் பெறவேண்டில்
நிறைவினை அளிநாமம் நிலைபெற அடைநெஞ்சே
நறையுறு மலர்சூடும் நவமெனு மணிநீலக்
கறைமிட றுடையானூர் கழுமல நகர்தானே...5.
வயசு கோளாறு
10 months ago
2 comments:
சீர்காழிக்குக் கழுமலம் என்ற பெயர் வந்ததன் காரணம் என்ன?? மறந்துட்டேன். :(
கழுமலம்: உரோம முனிவர் பூசித்து ஞானோபதேசம் பெற்று உலகிலுள்ள உயிர் களின் மலங்களைக் கழுவும் வரம் பெற்றார். அதனால் "கழுமலம்' என பெயர் பெற்றது.
தொகுப்பு: எஸ். கமலா
ஆதாரம்: "வாரியார் பக்கங்கள்'
Post a Comment