Saturday, May 28, 2011

கழுமலம் அடை நெஞ்சே (சீர்காழி)

விளம் புளிமாங்காய் விளம் புளிமாங்காய் - என்ற வாய்பாடு.

மிடிசெயு பவமென்னும் வினைதரும் தளைநீங்கி
விடுபடு நிலைவேண்டில் விழைவொடு அடைநெஞ்சே
கொடிமண மலரோடு குவிமுகை அவிழ்கொன்றை
கடிமலர் பொழில்சூழும் கழுமல நகர்தானே...1.

உயவினை அளிஊழில் உழல்கிற நிலைதீர
நயமுறு நெறிவேண்டி நலம்பெற அடைநெஞ்சே
இயமனை உதைசெய்தே இணையடி தருவானின்
கயலுகள் வயல்சூழும் கழுமல நகர்தானே...2.

உயவு= வருத்தம்.

செவியணி குழையாடச் சிவநட மிடுகோலம்
குவிகரம் சிரம்கொண்டு குரைகழல் நினையன்பர்
புவிபுகழ் தமிழ்பாடப் புகல்தரும் பதியான
கவினுறு பொழில்சூழும் கழுமல நகர்தானே...3.

கிலிதரும் மரணம்தான் கெடுவென வரும்போது
நலிவினை அடையாமல் நலம்பெற அடைநெஞ்சே
புலியதள் உடையானின் புகலடி நினைவாரின்
கலிமலி விழவாரும் கழுமல நகர்தானே...4.

கெடு=தவணை.

சிறையெனு இகவாழ்வில் தெளிவினைப் பெறவேண்டில்
நிறைவினை அளிநாமம் நிலைபெற அடைநெஞ்சே
நறையுறு மலர்சூடும் நவமெனு மணிநீலக்
கறைமிட றுடையானூர் கழுமல நகர்தானே...5.

Saturday, May 21, 2011

திருஞானசம்பந்தர் துதி!

திருமடம் தீயரால் தீப்பட நற்பா
அருளி அழலை அணைத்தப் --பெருகும்
தகவதனைப் போற்றிச் சழக்கரை வென்ற
புகலியர்கோன் பொற்றாள் புகல்...6.

கலயம் கொளுநீறை கன்னியாய் மீட்டத்
தலமுறு நற்பதிகம் தந்த -- நலத்தர்
நிகரிலியாய் கூத்திடும் நிர்மலன் அன்பர்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...7.

யுகமும் கணமும் உருளச் சுழன்றே
இகத்தை இனிதாய் இயக்கி -- உகப்பான்
சிகையில் மதிசேர் சிவனருட் செல்வன்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...8.

அருட்கவி அப்பருடன் அன்றுதமிழ் பாடி
திருத்தாழ் திறந்தடைத்த செல்வர்-- விருப்பில்
புகையெரிகான் ஆடிடும் புண்ணியன் மைந்தன்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...9.

சைவ நெறிகள் தழைத்தோங்கச் செய்தவர்
மெய்யாம் வழியில் வென்றவர்-- தெய்வ
மகவாய்த் தலங்கள் வழிபடு தொண்டர்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...10.

Monday, May 16, 2011

திருஞானசம்பந்தர் துதி!

அம்மே எனவழுது அன்றுண்டார் ஞானப்பால்
பெம்மான் உமைபங்கர் பேரருளால்-- எம்மான்
புகழினையேத் தேவாரப் புத்தமுதாய்த் தந்த
புகலியர்கோன் பொற்றாள் புகல்...1

பொங்கலை வானதிப் பூண்ட சடையனைத்
தங்கரங் கொட்டியே சாற்றுகையில்--எங்கும்
புகழொலிக்க ஈசனிடம் பொற்றாளம் பெற்ற
புகலியர்கோன் பொற்றாள் புகல்...2

அல்லும் பகலும் அரனின் நினைவினில்
வெல்லும் எமபயம் மெய்யென்ற-- நல்லன்
சகமிதன்சீர் மேவிடு சம்பந்தன் மாணி
புகலியர்கோன் பொற்றாள் புகல்...3

மழவன் மகள்நோய்தீர் வாடாப் பதிகம்
அழகாய் அருளிய அன்பர்-- குழகன்
உகந்தளிசீர் பல்லக்கில் ஊரும் இளையோன்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...4

நாள்களும் கோள்களும் நல்லன எம்மானின்
தாள்தொழும் அன்பர்க்கே சாலுமென்றார்-- வேளை
மிகவிழித்துத் தீப்படச் செய்தான் அடியர்
புகலியர்கோன் பொற்றாள் புகல்...5

Friday, May 13, 2011

வண்ணப் பாடல்!

கன்றி ,.னாவென நாடி யருளுவை
...கொன்றை சேர்சடை ஈச உனதடி
...என்று மேமற வாத நிலைதனை.. அருளாயோ
ஒன்ற தாகிய மூல முதலுனை
...என்ற .னாதரம் ஆய அருளென
...உன்ற .னாடிய பாத முளமுற.. மகிழேனோ!
தொன்று சேர்வினை யாவு மழியவை
...துன்ப மேபவ வாரி வடியவை
...துன்றி நேயம தூறு முனதிரு .. வருள்தாராய்
நின்றி டாதயை நாடு மடியரின்
...நெஞ்ச மேவிய கோவி லுறைதிரு
...நின்ற ஊரினை ஆளு மறையறை.. பெருமானே!

Friday, May 6, 2011

நாடகனுக்குத்தோடகம்!

விதியோ வினையோ வெருவா திருநீ
நிதியா யருளே நிமலன் தருவான்
சதிராய் நடமே தகவாய்ப் புரியும்
கதிதாள் துதியில் கரைவாய் மனமே...6

மருவில் மதியன் மணிசேர் மிடறன்
பொருதீ வினையை பொடிசெய் திடுவான்
தருஆல் நிழலில் தவமே புரியும்
குருதா ளினையே குறிநீ மனமே...7

பொறியில் படுமைம் புலனும் அடையும்
வறிதாம் மடமே வழுவாய் மலியும்
நெறிசேர் வழியே நிமலன் அருளே
அறிவாய் மனமே அணியார் பதமே...8

வறிது= அறியாமை.

தலைமேல் அரவும் தவழும் நிலவும்
அலைபாய் நதியும் அழகாய் மிளிரும்
மலைமேல் நடமே வகையாய்ப் புரிவான்
நிலைபேர் அருளே நினைநீ மனமே...9

ஒருதத் துவமும் உரையார் எனினும்
உருகிக் கனியும் உளமே குடிலாம்
மிருகத் ததளே விழையும் உடையான்
அருளைத் தருதாள் அடைநீ மனமே...10.