Sunday, November 14, 2010

அடியேற்கு அருள்வாய் (திருவண்ணாமலை)


'மா புளிமாங்காய் மா புளிமாங்காய்' என்ற வாய்பாடு.

பண்ணார் நடமாடும் பதமே தருவாயே
கண்ணால் முடி,தாளைக் காணா அயன்மாலும்
விண்ணாய் வளர்தீயாய் மிளிரும் உனைநாடும்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....1

புண்ணாம் படிநோவப் புரியும் வினையோடக்
கண்ணார் ஒளிமேவும் கருணை பொழிவாயே
மண்ணாய்ப் புனல்வானாய் வளியாய் அழலானோய்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....2

கண்ணால் உகுநீருக் கருள்வாய் மதலைக்கே
உண்ணா அமுதுண்டே உமையா ளுடைமைந்தாய்
பண்ணார் பதிகத்தால் பரவித் துதிசெய்தார்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....3

கண்ணீர் விழிமல்கக் கரையும் உணர்வாகி
எண்ணேன் உனதன்பை இரங்காய் இறையோனே
விண்ணாய் உயர்கோவில் மேவும் அருணேசா
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....4

புண்ணார் விழிசெந்நீர்ப் புனலாய் வழிந்தோடக்
கண்ணாய்த் தனதப்பும் கருணை சொலப்போமோ?
திண்ணார்த் தடந்தோளன் திண்ணன் துதிசெய்யும்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....5

3 comments:

Geetha Sambasivam said...

கண்ணால் உகுநீருக் கருள்வாய் மதலைக்கே
உண்ணா அமுதுண்டே உமையா ளுடைமைந்தாய்//

இது என்ன திருவிளையாடல்?? புரியலையே! :(

Thangamani said...

குளக்கரையில்,பசியுடன் பாலுக்கழுத குழந்தை
ஞானசம்பந்தனுக்கு உமையன்னை
சமேதராக காட்சி தந்து,
பரிவுடன் பொற்கிண்ணத்தில்
உமையம்மை பால் கொடுத்த அருளாடல் தான் இது!
நன்றி! கீதாம்மா!

அன்புடன்,
தங்கமணி.

Geetha Sambasivam said...

ஓஹோ, எப்படி மறந்தேன்???? :))) நன்றி அம்மா, நினைவூட்டலுக்கு.