Sunday, November 21, 2010

அடியேற் கருள்வாயே!(திருவண்ணாமலை)


வண்டார் மலர்மாலை வடிவாய் இசைந்தாடக்
கண்டோர் உனைநாடும் கதியாய் வருவாயே
பண்டாய் நவமானாய் பதியே பரமேசா
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....6

எண்ணாய் எழுத்தாகி இயம்பும் பொருளாகிப்
பண்ணார் இசையாகிப் பரவும் துதியானாய்!
கண்ணோர்க் களியாகக் காணும் பெருஞ்சோதி
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே.... 7

எண்ணேன் இமைப்போதுன் இணைத்தாள் சிரமேற்கப்
பண்ணேன் உனைநாளும் பரவும் துதிபூசைத்
தண்ணார் தடம்சோலைத் தருசூழ் வனமோங்கும்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....8

கண்ணா யிரங்கொண்ட காளி யவள்கேள்வா
விண்ணா றினையேற்கும் விரிசெஞ் சடையோனே
வெண்ணீ றணிவோனே விந்தை அழலோனே
அண்ணா மலையோனே அடியேற் கருள்வாயே....9

விண்ணோர் அமுதேஎம் வினையாம் பவம்தீர்ப்பாய்
பெண்ணோர் புறம்வைத்தாய் பிறைவார் சடையோனே
மண்ணோர் தொழும்ஞான மறையோன் ரமணர்சேர்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே....10

2 comments:

Geetha Sambasivam said...

மண்ணோர் தொழும்ஞான மறையோன் ரமணர்சேர்//

மனசில் நிற்கும் வரிகள்.

Thangamani said...

அன்பு கீதா,
கருத்துக்கு மிகவும் நன்றி!