சிட்டாகப் பறந்தோடும் சிறுவயது நினைவுகளில்
பட்டாசு மத்தாப்பூ பரவசமாம் தீபஒளி!
புத்தம் புதுவுடையாம் பூப்பூத்தச் சீட்டியிலே
சுத்தி மகிழ்ந்திருப்பேன் சுவைமலரைப் படித்திடுவேன்!
தின்னத் திகட்டாதத் தேன்குழல் மைசூர்பா
என்னநான் சொல்லுவது என்னம்மா கைவண்ணம்!
ஓலைவெடி யானைவெடி ஊசிவெடி சீனவெடி
காலைமுதல் நாள்முழுதும் கலகலக்கும் வெடியொலிகள்!
பொட்டி மத்தாப்பூ புஸ்வாணம் பூமுத்தாய்க்
கொட்டி உதிந்திடுமே கொள்ளை அழகுடனே!
சர்ரென்று தரைசுழலும் சங்குச் சக்கரந்தான்
விர்ரென்று ஏரோப்ளேன் விண்பறக்கும் அதிசயந்தான்!
வெடியெல்லாம் சோதரர்கள் வெடித்திடுவர் ஆர்வமுடன்
படபடக்கும் இதயத்துடன் பார்த்திருப்பேன் பயத்தோடு!