Monday, September 14, 2009

நீலகண்டனை ஏத்து மனமே



நல்லிசை பாடல் நாளும் சிவநாமம் சொல்லும்
...நமவாதை யாவு மழியும்
தொல்வினை யாலே தோன்றும் துயரான தென்றும்
...தொலைந்தோடும் ஈச நருளால்
கல்லெனும் போதும் பூவாய் அணிந்தாளும் நம்பன்
...கதியாகி அன்பில் அணைவான்
வல்லியை வாமம் கொண்ட மணிநீல கண்டன்
...மலர்த்தாளை ஏத்து மனமே!



மடலவிழ் பூவில் கோத்த அழகான மாலை
...மணமோடு தோளில் அசைய,
சுடலையின் நீறு பூசி நமையாளும் ஐயன்
...துணயாகி நாளும் அருள்வான்!
நடமிடு கோலம் காணும் அடியாரின் அன்பன்
...நலமாகும் வாழ்வு தருவான்!
மடமயி லாளின் பங்கன் மணிநீல கண்டன்
...மலர்த்தாளை ஏத்து மனமே!

2 comments:

Geetha Sambasivam said...

//தொலைந்தோடும் ஈச நருளால்//

ஈசன்? அல்லது ஈசந்?? சேர்த்து எழுதும்போது ஈசநருளால் னு வருமா??

கைலை நாதன் தரிசனமும் அருமை, கவிதையும் வழக்கம்போல் அருமை அம்மா.

Thangamani said...

அன்பு கீதா,
நன்றி!
பொங்கு தமிழ் எழுதியில்தான் எழுதினேன்.
ஒரோருசமயம் na எழுதினாலும்,ந தான் வரது.
அதுதான் இப்படி.

anbudan,
thanggamaNi.