Friday, August 28, 2009

சிவனடி விழைவாய்!

சிறையெனு கருவறை சிறுமையு மழியும்
..சிவசிவ எனவுரை! சிதறிடும் துயரே!!
முறையெது மறிகிலை! மொழிவது மவனின்
..முடிமுத லடிவரை முழுமுத லுருவே!
குறைமதி புனைசடை குழையணி இறைவன்
..குரைகழல் நடமிதில் குவிமன மடைய
மறைதொழு சிவனடி மலரிணை விழைவாய்!
..வளமிகு திருவினை வரமென அடைவாய்!

ஆனைமுகா!

ஆதாரம் நீதானே ஆனைமுகா! வேத(ம்)உரை
பாதார விந்தம் பணிந்திடுவேன்! --நாதா!
விதவித மாலை மிளிர்ந்திடச் சாற்றி
நிதநிதம் எண்ணல் நிறைவு.

அருள் தா!

காடுவரை செல்லுமுன்னே கண்வைத்துப் பார்த்திட
வீடுவரை சொந்தங்கள் வேண்டுவதே!-- தேடுமனம்
இற்றிடத் துன்புறும் ஏழை நிலைக்கு,மடி
தற்றிட வந்தருள் தா.

Monday, August 24, 2009

அறுசீர்விருத்தங்கள்!

சந்தவசந்தக் குழு (த் தலைவர்) ஆசான் கவிமாமணி.இலந்தை அவர்கள்,
சிலவருடங்களுக்குமுன் கொடுத்தப் பயிற்சிக்கு செய்த
அறுசீர்விருத்தங்கள்...

கற்களைப் பதித்து வைத்தே
...கனகமாய் பூக்கள் தைத்தே
அற்புத அணிகள் பூட்டும்
...அன்னையின் கோலம் காட்டும்!
சொற்பதம் கடந்த அன்னை
...சொக்கிடும் அழகு தன்னை
கற்றவர் மற்றோர் எண்ணி
...கனிவுடன் தொழுவர் நண்ணி!

மற்றுமோர் பாடல்!

தோல்வியும் கூட வெற்றித்
...தொடக்கமே எழுவாய்த் தம்பி!
கால்கொளும் மண்ணில் மேழி
...கடினமாய் உழவு செய்தால்
பால்கொளும் செந்நெல் காணப்
...பாங்குடன் முடியும் அன்றோ?
மேல்வரும் உயர்வு கூட
...மேவியே முயற்சி செய்க!

Tuesday, August 18, 2009

பரமாஉனைத் துதித்தேன்!

வசுதேவரின் மகனாய்ச்சிறை மறைவாயவ தரித்தாய்!
சிசுபாலனை வதைசெய்திடத் திருமாலென உதித்தாய்!
நசைநீங்கிய நலம்தந்திடும் நவகீதையை அளித்தாய்!
பசுமாடுகள் தினம்காத்திடும் பரமாஉனைத் துதித்தேன்!

Saturday, August 8, 2009

அருள் வண்ணம் !

கறைவண்ணக் கண்டனவன் கழல்வண்ணம் எழில்வண்ணம்
பிறைவண்ணன் செஞ்சடையன் பெருமைசொலல் எவ்வண்ணம்?
மறைவண்ணம் ஒலிவண்ணம் வளரொளிர்தீ செவ்வண்ணம்!
இறைவன் தன் அருள்வண்ணம் இதம்தரும்நம் மனம்கொள்வம்.