Saturday, August 3, 2013

தென்குடித்திட்டை ('திட்டை')---3

ஒருபது சிரம்தனை உடையவன் செருக்கழித்(து)
அருளினை அளித்தவன் அடியிணைப் போற்றியும்
திருமறை விழைபவன் தென்குடித் திட்டையை
மருவிடும் அடியவர் வல்வினை மாயுமே....8

 சூடிய மதிநதி துலங்கிடும் முடியுடன்
ஆடிய அடியையும் அயனரி காணவே
தேடிய சோதியன் தென்குடித் திட்டையை
நாடிய பத்தரை நல்லன நாடுமே....9

கரத்திலோர் மான்மறி கனல்மழு ஏந்திமுப்
புரத்தையே தீயெழப் பொடிசெயும் மன்னவன்
திரைத்தலை அரனுறை தென்குடித் திட்டையை
சிரத்தையாய்த் தொழுபவர் தீவினை சிதறுமே....10

அழுதவன் தாள்பணி அன்பரின் துணையவன்
எழுகதிர் ஒளியவன் இளமதி சடையனின்
செழுவயல் சூழ்தரு தென்குடித் திட்டையை
தொழுபவர் தொல்வினை தூசென விலகுமே....11

ஊர்விடை அமர்பவன்  வார்சடை மதியினன்    
தார்மலி மார்பினன் ஓர்நுதல் விழியினன்
சீர்மலி சோதியன் தென்குடித் திட்டையை
சேர்பவர் தீவினை தீர்வது திண்ணமே....12

No comments: