Thursday, August 29, 2013

திருக்கருகாவூர் - 1

(கலிவிருத்தம் - 'தேமா தேமா புளிமா புளிமாங்காய்' - வாய்பாடு)(சம்பந்தர் தேவாரம் - 1.27.1 - "முந்தி நின்ற வினைக ளவைபோகச்")

மண்ணாய் விண்ணீர் வளிதீ எனவானான்
கண்ணால் அன்பைக் கனிவாய் அருளீசன்
தண்ணார் கங்கை சடையன் கருகாவூர்
எண்ணாய் நெஞ்சே இலையோர் இடர்தானே....1

தார்கொள் தோளில் தவழும் அரவேற்பான்
பேர்சொல் பத்தர் பிணிசெய் துயரோட்டும்
சீர்கொள் தாளன் திகழும் கருகாவூர்
சேர்க நெஞ்சமே சிதையும் வினைதானே....2

கோதே விஞ்சும் குணங்கொள் அடியேனுக்(கு)
ஆதா ரம்பூங் கழலே எனவேண்டி
மாதோர் பங்கன் வதியும் கருகாவூர்
நீ தீ தோட நினையாய் மடநெஞ்சே....3
கோது=குற்றம்.

நித்தன் ஆலின் நிழலில் அமர்போதன்
பத்தர் தம்மின் பரமன் கருகாவூர்
முத்தன் பூந்தாள் முடியில் தரிப்பார்க்கே
எய்த்தல் இல்லா இனிய நிலைதானே....4

அங்கம் நீற்றில் அழகாய்த் துதைந்தானின்
துங்க செந்தாள் தொழுவார்க் கருளீசன்
திங்கள்  சூடித் திகழும் கருகாவூர்
அங்கை கூப்பிப் பணிவார் அடியாரே....5


No comments: